அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு, கூவத்தூர் விவகாரத்தில் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை பதில் அளித்துள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு, கூவத்தூர் விவகாரத்தில் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசியுள்ளது குறித்து செய்தியாளர்கள் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதற்குதான் இப்போது எல்லாமே எதிர்ப்பு கொடுத்திருக்கிறார்களே, பத்திரிகைகளில் எல்லாம் வந்திருக்கிறது. அவர் ஒரு பெரிய ஆளு இல்லை. அவர் தீபா கட்சிக்கு போய்விட்டு வந்தவர். ஏதோ இறக்கப்பட்டு சேர்த்தோம். அவர் ஏற்கெனவே இதில் இல்லாத ஒரு மனநிலையில் இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால், அவரை விட்டு வைத்திருந்தோம். இப்போது அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால், கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.” என்று கூறினார்.
கருத்துக் கணிப்பு எல்லாமே தி.மு.க-வுக்கு ஆதரவான கருத்துக் கணிப்பாகவே இருக்கிறது. அதே போல, பா.ஜ.க-வுக்கும் ஆதரவாக இருக்கிறது இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கருத்து கேட்டனர்.
இதற்கு பதிலளித்த எடப்ப்பாடி பழனிசாமி, “ஓட்டுப்போடுற மக்கள் கருத்துக் கணிப்புக்கு வருவதில்லை. யாருக்கு ஓட்டு போடுவாங்க என்று பொருத்திருந்து பாருங்கள். போனமுறை அப்படிதான் சொன்னார்கள். 2019-ல் ஒன்றுமே வரவில்லை என்று சொன்னார்கள். 2021-ல் என்னாச்சு, 75 இடங்களை நாங்கள் கைப்பற்றினோம் இல்லையா. அதில் கூட்டிப் பாருங்கள். 7 நாடாளுமன்ற தொகுதி எங்களுக்கு வெற்றி பெறுகிறது. அதில் 6 சட்டமன்ற தொகுதி இருக்கும். அந்த 6 சட்டமன்ற தொகுதி கூட்டினால், 7 நாடாளுமன் தொகுதி அப்போதே வெற்றி பெறுகிறது. ஈரோட்டில் 7,400 ஓட்டுதான் குறைவு, சிதம்பரத்தில் 384 ஓட்டுதான் குறைவு, அதே போல நாமக்கல்லில் 15,400-தான் குறைவு, கள்ளக்குறிச்சியில் 20,000-தான் குறைவு, வேலூரில் 27,000-தான் குறைவு, ஆக இதெல்லாம், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, 10 ஆண்டு காலம் நாங்கள் ஆட்சியில் இருந்தோம். பல்வேறு விமர்சனங்களை செய்தார்கள். 523 அறிவிப்புகளை தி.மு.க தலைவர் கவர்ச்சிகரமாக அறிவித்தார். அதை நம்பி ஓட்டு போட்டார்கள். அந்த கால கட்டத்திலேயே நாங்கள் இவ்வளவு வெற்றி பெற்று வந்திருக்கிறோம். இந்த மூன்று ஆண்டு காலத்தில், இந்த ஆட்சி மீது கடுமையான வெறுப்பு, மகள் கொதிச்சுப் போயிருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, கரண்ட் பில் உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, கடை வரி உயர்வு, அதே போல, எல்லா வகையிலும் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது. இப்படிபட்ட நிலையில்தான் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். அதனால், எங்களுடைய கூட்டணி மிக பிரம்மாண்டமாக வெற்றி பெறும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“