வாக்கு சேகரிப்பின்போது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்க முயன்ற சேலம் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் விக்னேஷுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வேட்பாளரையும் அறிவித்துள்ளன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை நேற்று முன்தினம் திருச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார். இதேபோல், மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை திருச்சியில் நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் 40 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் சேலம் ஜலகண்டபுரம் அருகே உள்ள பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார். தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் இன்றும் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரையை தொடங்கினார்.
இன்று மாலை திருச்சியில் அ.தி.மு.க தேர்தல் பரப்புரை தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், கோவிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி, சேலம் வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கும், வேட்பாளர் விக்னேஷ்க்கும் ஆரத்தி எடுக்கப்பட்டது. அப்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு வேட்பாளர் விக்னேஷ் பணம் கொடுக்க முயல, எடப்பாடி பழனிசாமி சட்டென டென்ஷனாகி, ’எடுக்காத, எடுக்காத’ என வேட்பாளரை தடுத்தார். பின்னர் வேட்பாளரிடம், “பணத்தை பாக்கெட்ல வச்சிக்காத. விளையாட்டுப் பிள்ளை மாதிரி பண்ணாத. பாக்கெட்லயே பணம் இருக்கக்கூடாது” என அறிவுரை கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“