Advertisment

மூன்றாண்டு ஆட்சியின் பரிசா… முத்திரைத் தாள் கட்டணம் உயர்வு? இ.பி.எஸ் – டி.டி.வி தினகரன் கண்டனம்

கலெக்ஷன் - கரப்ஷன் - கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஸ்டாலினின் அரசு, மக்கள் தலையில் வரிச் சுமையை ஏற்றியுள்ளது – எடப்பாடி பழனிச்சாமி; முத்திரைத் தாள் கட்டண உயர்வு தி.மு.க அரசின் நிர்வாகத் திறனற்றத் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது – டி.டி.வி தினகரன்

author-image
WebDesk
New Update
EPS and TTV

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி தினகரன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்தி சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; "மூன்றாண்டு சோதனை ஆட்சியின் பரிசாக தமிழ் நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்!

பொம்மை முதலமைச்சர் தலைமையிலான இந்த தி.மு.க அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டு மக்களுக்கு சோதனையான காலமாகவே இருந்து வருகிறது. விடியல் தரப்போகிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஸ்டாலினின் ஆட்சி ஒரு இருண்ட ஆட்சியாகவே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. திரும்பிய துறைகளில் எல்லாம் நிர்வாகத் திறமையற்று மக்கள் தலையில் பேரிடியாக வாய்த்திருக்கிறது இந்த அரசு, தனது மூன்றாண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழ் நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

நிதி மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, ஏற்கனவே 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளிகள் ஆக்கியுள்ளது. அது போதாதென்று 150 சதவீதம் வரை சொத்து வரி மற்றும் வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, 52 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு, பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வு என தனது நிர்வாகத்தின் திறமையின்மையால், மக்கள் தலையில் சுமைகளை ஏற்றியுள்ளது இந்த தி.மு.க அரசு.

கடந்த 8.7.2023 அன்று, பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிய தி.மு.க அரசு, தற்போது தமிழ் நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. 8.5.2024 தேதியிட்ட அரசு அறிவிக்கையின்படி, 3.5.2024 முதல் தத்து ஆவணங்கள், ஒப்பந்த ஆவணங்கள், ரத்துப் பத்திரங்கள், நகல் பத்திரங்கள், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணங்களை 10 மடங்கு முதல் 33 மடங்கு வரை உயர்த்தியுள்ளது நிர்வாக திறனற்ற தி.மு.க அரசு.

இருக்கின்ற நிதியை சரிவர மேலாண்மை செய்து, புதிதாக வாங்கும் கடன்களை மூலதனச் செலவுகளாகவும், மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடு செய்வதே நல்ல அரசின் இலக்கணம். அதன்படி செவ்வனே செயல்பட்ட அம்மா அரசும், எனது தலைமையிலான அம்மாவின் அரசும் மக்கள் மீது சுமைகளை பெரிதும் ஏற்றாமல், பொருளாதாரத்தை உரிய குறியீடுகளுக்குள் சரிவர நிர்வகித்து வந்தது.

ஆனால், கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, அனைத்துத் துறைகளையும் முறைகேடுகளால் சீர்குலைத்து, மாநிலத்தின் நிதிநிலைமையை நிலைகுலையச் செய்து, தன் தவறுகளால் ஏற்படும் பாரத்தை, வரி மற்றும் கட்டண உயர்வுகள் மூலம் மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றுவது கடும் கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே, தி.மு.க. அரசு கொண்டுவந்த வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை இதுவரை இந்த தி.மு.க. அரசு அமல்படுத்தவில்லை. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இதுவரை தடையாணை தரவில்லை.

எனவே, எவ்வித நியாயமும் இன்றி பல மடங்கு முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வழிகாட்டுதல் மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும் என்றும் தி.மு.க அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மறுபுறம் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

”பொதுமக்களை பாதிக்கும் முத்திரைக் கட்டணம் பன்மடங்கு உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். 

பத்திரப்பதிவுத் துறையின் மூலம் நடைபெறும் பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம், உடன்படிக்கை என அனைத்துவிதமான செயல்பாடுகளுக்குமான முத்திரைக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியிருக்கும் தமிழக அரசின் மக்கள் விரோதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. 

பால்விலை உயர்வில் தொடங்கி மின்சாரக் கட்டணம், சொத்துவரி, சாலைவரி, குடிநீர் வரி மற்றும் நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பை நேரடியாகவும், மறைமுகமாவும் உயர்த்திய தி.மு.க அரசு, தற்போது முத்திரைக் கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தியிருப்பது தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் நிதி மேலாண்மையை முறைப்படுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், வரி மற்றும் கட்டண உயர்வு எனும் பெயரில் ஏழை, எளிய மக்களின் மீது கூடுதல் சுமைகளை ஏற்றி, அதன் மூலமாக மட்டுமே வருவாயைப் பெருக்க முயற்சிப்பது தி.மு.க அரசின் நிர்வாகத் திறனற்றத் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

எனவே, பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் முத்திரைக் கட்டணம் பன்மடங்கு உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மக்கள் மீது சுமையை ஏற்றாமல் அரசின் வருவாயை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு டி.டி.வி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi Palanisamy Ttv Dinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment