அ.தி.மு.க காணாமல் போகும் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4ல் தெரியும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
அந்தவகையில் சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, அரியலூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ”பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அதிமுகவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. நான் 35 கூட்டத்திற்கு மேல் சென்றிருக்கிறேன். கூட்டங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. ஒருசிலர் சொல்றாங்க, 2024க்கு பிறகு அ.தி.மு.க எங்க போகும்னு தெரியாது என்கிறார்கள். யார் காணாமல் போகிறார்கள் என்பது ஜூன் 4 ஆம் தேதி தெரியும். மக்கள் முடிவு செய்வார்கள்.
அ.தி.மு.க பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டு காலம் நிறைவு செய்த கட்சி. மதுரையில் பிரமாண்ட மாநில மாநாடு நடந்தது. இந்தியா மட்டுமில்லை இந்த மாநாட்டை உலகே திரும்பி பார்த்தது. இது எல்லாம் தெரியலாம் சிலர் வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டதால், ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.,வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அதை கட்டி காத்தவர் ஜெயலலிதா. இரண்டு பேரும் தெய்வமாக இருந்து அ.தி.மு.க.,வை காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே இரண்டு தெய்வத்தின் ஆசியுடன் இருக்கின்ற கட்சி என்பதை மறந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க தெய்வ சக்தி உள்ள கட்சி. அ.தி.மு.க.,வை அழிக்க நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள்.
இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்றால் அது அ.தி.மு.க என்ற பெருமையை பெற்றுள்ளோம். 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சியை பார்த்து மிரட்டி பார்க்கிறீர்கள். இந்த வேலை எல்லாம் இங்கே எடுபடாது. 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் இருக்கின்ற கட்சி. அ.தி.மு.க.,வை சீண்டி பார்த்தால், அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை தொண்டர்கள் உங்களுக்கு பாடம் கற்பிப்பார்கள்.
மகளிர் உரிமைத்தொகையை கொடுக்க நாங்கள் பலமுறை போராடினோம். சட்டமன்றத்தில் அடிக்கடி வலியுறுத்தியதால் தான் 27 மாதங்களுக்கு பிறகு மகளிர் உரிமைத்தொகையை கொடுத்தனர். தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் கொடுப்போம் என்று சொன்னாங்க. இப்போது தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் தான் உரிமை தொகைன்னு சொல்றாங்க.
இதேமாதிரி அனைத்து நகர்புற பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பஸ்சுக்கு முன்னாடியும் பின்னாடியும் பிங்க் கலர் பெயிண்ட் அடித்து அந்த பஸ்சில் சென்றால் தான் என்று சொல்கிறார்கள்.
ஸ்டாலின் பதவி ஏற்று 3 வருஷம் ஆச்சு. ஆனால் மக்களை இப்போது தான் சந்திக்கிறார். அதுவும் டீக்கடையில். சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதை மட்டுமே முதல்வர் செய்கிறார். தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். கஞ்சா கிடைக்காத இடமே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.
மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை பா.ஜ.க. கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அ.தி.மு.க.விற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும்போது எதிர்ப்போம். பாராட்டும்போது பாராட்டுவோம். அதுவே அ.தி.மு.க. ஸ்டைல்.
கூட்டணியை நம்பி அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கவில்லை. மக்களை நம்பியே சந்திக்கிறோம். கூட்டணியில் இருந்தவரை பா.ஜ.க.விற்கு விசுவாசமாக இருந்தோம்; தற்போது விலகிவிட்டோம். பா.ஜ.க.வை எதிர்க்கவில்லை என்று கூறுகின்றனர். அதற்காக பா.ஜ.க.வினரை சுட்டா வீழ்த்த முடியும்?” இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.