எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையையோடு ஆட்சி அமைக்கும், அ.தி.மு.க.,வுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாகையில் பல்வேறு மாற்று கட்சிகளிலிருந்து விலகி சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்வு எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.ம.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 640 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமில்லை. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றிபெற்று அ.தி.மு.க தனிப் பெரும்பான்மையையோடு ஆட்சி அமைக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் நான் முதல்வராக இருந்தபோது கண்ணின் இமைபோல விவசாயிகளை பாதுகாத்து வந்தோம். நாகை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயலின்போது அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து சாதனை படைத்தோம். வறட்சி வருகின்ற நேரமெல்லாம் நிவாரண தொகைகளை வழங்கியது அ.தி.மு.க ஆட்சி.
டெல்டா விவசாயிகளின் நிலம் பறிபோக விடாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாமல், ஐந்தாண்டு கால ஆட்சியில் இரண்டு முறை கூட்டுறவு கடன் மற்றும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்தது அ.தி.மு.க அரசு.
/indian-express-tamil/media/post_attachments/e41fa2dd-3c2.jpg)
விவசாய தொழிலாளிக்கு பசுமை வீடு, கறவை மாடுகள், தடையில்லா உணவுப்பொருள் என வழங்கி ஏழை மக்களை பாதுகாத்த அரசு அ.தி.மு.க அரசு. குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்தது மட்டுமல்லாமல் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற உதவி செய்தோம். நாகை மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவ கல்லூரி உருவாக்கியதும் அ.தி.மு.க அரசுதான்,” என்று அவர் பேசினார்.
பின்னர் தஞ்சையில் செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது;
பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு் சென்ற சசிகலா கடந்த 3 ஆண்டுகளாக எங்கிருந்தார்?. இத்தனை நாள் கட்சியை காப்பாற்றியது சசிகலாவா?
இதென்ன வேலை வேண்டாம் என்று ரிட்டயர் ஆகி விட்டு, மீண்டும் வந்து வேலைக்கு சேர்ந்து கொள்ளும் விஷயமா? அ.தி.மு.க.,வுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அ.தி.மு.க தொண்டர் தான் கட்சியை காப்பாற்றி உள்ளனர். ஜெயலலிதா தனி அணியாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது, ஜானகி அணியில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு தலைமை தேர்தல் ஏஜெண்டாக இருந்தவர் ஓ.பி.எஸ். அவர், அப்போது இருந்தே ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இல்லை.
அ.தி.மு.க.,விற்கும் விசுவாசமாக இல்லை. எப்போதும் அவர் சுயநலமாக தான் இருந்துள்ளார். எனது தலைமையில் நடந்த அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தவர் ஓ.பி.எஸ்.
தற்போது, ராமநாதபுரத்தில் அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டவர் ஓ.பி.எஸ். தொடர்ந்து அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்து வரும் ஓ.பி.எஸ்.,சை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? கட்சிக்கு யார் துரோகம் செய்தாலும் ஓ.பி.எஸ்.,சின் நிலை தான் ஏற்படும் என்று தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, இந்நிகழ்வில் இஸ்லாம் மதத்தின் புனித நூலான குரானை கட்சியில் இணைந்தோருக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினர். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, சின்னையன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், மோகன், பெஞ்சமின் உள்ளிட்டோர் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் திருமண நிகழ்வில், கலந்துகொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“