/indian-express-tamil/media/media_files/2025/10/15/edappadi-2025-10-15-13-55-16.jpg)
தமிழக சட்டப்பேரவை இன்று இரண்டாம் நாளாக கூடியது. அப்போது, சட்டப்பேரவைக்கு வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தார்கள். கரூர் கூட்ட நெரிசல் மற்றும் சிறுநீரக திருட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தார்கள். தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார். மேலும், த.வெ.க தலைவர் விஜய் தாமதமாக வந்தது தான் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார். இதனிடையே அமைச்சர் சிவசங்கர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேசினார். அமைச்சர் சிவசங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி பேரவைத் தலைவர் அப்பாவு இருக்கை முன்பு எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க-வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வினரை இருக்கைகளில் சென்று அமர அப்பாவு அறிவுறுத்தினார்.
ஆனாலும் தொடர்ந்து அ.தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, அவைக் காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க-வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “கரூர் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எங்களை பேச அனுமதிக்கவில்லை. கடந்த 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமி புரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்த போது ஒரு காலணி வந்து விழுந்தது. அதை பற்றி இந்த அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசாங்கம் கரூர் பரப்புரைக்கு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். ஆனால், இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாக தான் பார்க்கிறது. அந்த அடிப்படையில் அரசின் அலட்சியத்தால் கரூரில் 41 உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே த.வெ.க தலைவர் விஜய், திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை நடத்தியுள்ளார். அதன் பின்னர் தான் கரூருக்கு வந்தார். ஏற்கனவே நடந்த கூட்டங்களில் எவ்வளவு மக்கள் வந்தார்கள் என்பது அரசு மற்றும் காவல்துறையினருக்கு தெரியும்.
அதற்கு ஏற்றவாறு இடத்தை பாதுகாப்பு பணியை பலப்படுத்தி இருந்தால் உயிர் சேதத்தை தவிர்த்திருக்கலாம். கரூரில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தார்கள் என்று நான் ஊடகங்களில் பார்த்தேன். ஆனால், அவ்வளவு காவலர்கள் இல்லை. வெளியில் நின்றவர்களை எல்லாம் கணக்குபோட்டு அறிக்கை கொடுக்கிறார்கள். ஆனால், விஜய் பேசிக் கொண்டிருந்த இடத்தில் பாதுகாப்பிற்காக அவ்வளவு காவலர்கள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.