பசுமை வழிச்சாலையை திமுக எதிர்ப்பது ஏன்? முதல்வர் கேள்வி

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு சாலை திட்டத்தை மேற்கொள்ளும்  என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பசுமை வழிச்சாலையை திமுக எதிர்ப்பது ஏன்? முதல்வர் கேள்வி

பசுமை வழிச்சாலை அமைப்பது மத்திய அரசின் திட்டம், சாலைக்கு நிலம் எடுப்பது மட்டுமே மாநில அரசின் பங்கு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று காலை வருகை தந்த முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “பசுமை வழிச்சாலை அமைப்பது மத்திய அரசின் திட்டம், சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தான் மாநில அரசின் பங்கு. திமுக ஆட்சியின் போதும் கூட சாலை அமைக்கும் பணிகள்  மேற்கொள்ளப்பட்டன.  அதிமுக ஆட்சியில் சாலை அமைக்க மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு சாலை திட்டத்தை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி தேவையில்லை என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்தது.

ஏப்ரல் 8, 2019 அன்று சென்னை உயர்நீதிமன்றம் நிலம் கையப்படுத்துவதற்கு முன்பே  சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயம் என்று கூறி, சென்னை – சேலம் பசுமை வழிச் சாலைக்கான நிலம் கையகப்படுத்துதல் அரசாணையை ரத்து செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தனது மனுவில்,” சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தத. அத்தகைய திட்டங்களுக்கு தனி நடைமுறை இருப்பதால், நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி தேவையில்லை” என்றும் தெரிவித்தது.

உள்ளூர் பல்லுயிர் மற்றும் வனவிலங்குகள் இருப்பிடத்தில்    இந்த நெடுஞ்சாலை திட்டம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஐ.ஐ.டி-தன்பாத் நிறுவனம்  மூலம் முறையாக ஆய்வு நடத்தியதை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறியதாகவும்  நெடுஞ்சாலை ஆணையம் தனது மனுவில் தெரிவித்தது.

மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சென்னை- சேலம் இடையே 277 கிலோமீட்டர் தூரத்திற்கு எட்டு வழி சாலை அமைக்கப்படுகிறது. பொருளாதார சாலைகள், இணைப்புச் சாலைகள், பல்வகை சாலைகள், தேசியச் சாலைகள் பயன்பாட்டு மேம்பாடு, எல்லை மற்றும் சர்வதேச தொடர்புச் சாலைகள், கடலோர மற்றும் துறைமுக தொடர்பு சாலைகள், அதிவிரைவுச் சாலைகள் என ஆறு அம்சங்களை பாரத்மாலா பரியோஜனா திட்டம் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Edappadi palanisamy chennai salem greenfield expressway land acquisition supreme court

Exit mobile version