தமிழ் செய்தி நாளேடுகளான தினத்தந்தி மற்றும் மாலைமலரின் உரிமையாளராகவும், முதன்மை தொகுப்பாசிரியராகவும் இருந்த பா.சிவந்தி ஆதித்தனார் மனிமண்டபத்தையும், உருவச் சிலையையும் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி தொலைக்காட்சி இயக்குநர் பா.ஆதவன் ஆதித்தன், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு 2018-ம் ஆண்டு, மறைந்த பத்ம ஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் பா. மணிமண்டபம் கட்டப்படும் என்ற அரசாணையை வெளியிட்டது. இதற்காக ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கின. கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று திருச்செந்தூர் - வீரபாண்டியபட்டணத்தில் "பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்" அவர்களின் மணிமண்டபத்தினை திறந்து வைத்தார். #SivanthiAditanar pic.twitter.com/dJDRGtLhZF
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 22, 2020
நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பொன்னாடை போர்த்தி முதல்வரை வரவேற்றார். மணி மண்டபத்தை திறந்து வைத்த பின் விழா மேடைக்கு வந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மணி மண்டபத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இளைஞர்கள் படிக்கும் பழக்கத்தை கொண்டு சேர்த்ததில் ஆதித்தனாரின் பங்கு மிகப்பெரியது என்றும் கூறினார். சிவந்தி ஆதித்தனார் பல துறைகளில் புரிந்த சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர், சென்னை மாநகர ஷெரீப்-ஆக நியமித்து அவரை அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர் என்பதையும் நினைவு கூர்ந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்ட முதலவர், இந்தியாவிலேயே பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கிய ஒரே அரசு, அதிமுக அரசு தான் என்றார். இந்தியாவிலேயே சிறந்த ஆளுமை மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.
திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு திட்டம், கருமேணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு, சாத்தான்குளம் வட்டத்திற்கு புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படும் போன்ற புது திட்டங்களை முதலமைச்சர் அறிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.