"விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?": ஓ. பன்னீர்செல்வத்தை மறைமுகமாக சாடிய இ.பி.எஸ்

விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
EPS Letter

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? என்றும், விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தன் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தி.மு.க குறித்தும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

அக்கடிதத்தில், "நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், 'அம்மா அவர்களின் புகழ் ஓங்குக' என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது.

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம் போல் உயர்ந்து விளங்கிய புரட்சித் தலைவி ஜெயலலிதாவை, ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள். பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய ஜெயலலிதா, பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.

Advertisment
Advertisements

இன்றைக்கு, தி.மு.க அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது. பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழ் நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச்சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என்று சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப் பூட்டு போடப்படுகிறது.

இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும். தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும். இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா ? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.

'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம்; மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம்; இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கு' என்று ஜெயலலிதா சூளுரைத்தார். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நமது சக்தியை நாளைய சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Admk Edappadi K Palaniswami

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: