அதிமுக பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் ஜூலை 11இல் நடந்தது. முன்னதாக, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்டு ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் இரட்டை தலைமை பதவியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிமுக கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக, அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது ஓ.பி.எஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமி நீக்கப்படுவதாக, ஓபிஎஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து அறிவித்தார்.
இந்நிலையில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி. வேலுமணி ஆகியோரை நியமனம் செய்து, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், ப.தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் அமைப்பு செயலாளர்களாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையனும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உட்பட வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் ஆகிய ஓபிஎஸ் அணியினர் 18 பேர் நீக்கப்பட்டனர். கட்சியினர் யாரும் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என இ.பி.எஸ் அறிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ். அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி. ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம். யாரையும் நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை இல்லை. இது சட்டப்படி செல்லாது.
மேலும் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன் உள்பட இபிஎஸ் அணியினர் 22 பேரை நீக்கம் செய்வதாக, ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.
இப்படி இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் மாறிமாறி, கட்சி பொறுப்பில் இருந்து உறுப்பினர்களை நீக்குவதாக அறிவித்துள்ளனர். இதனால், கட்சியில் மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இ.பி.எஸ் அரசு பங்களாவில் வைத்து, அ.தி.மு.க அலுவலகம் நடத்துவதாக ஓ.பி.எஸ் அணியினர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக, ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கிரீன்வேஸ் சாலையில் இபிஎஸ் தங்கியுள்ள அரசு பங்களாவில், அதிமுக அலுவலகம் நடத்தி வருகிறார். அங்கு வரும் 17ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பங்களாவில் அதிமுக கட்சி அலுவலகமும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டமும் நடைபெற அனுமதிக்க கூடாது என்று அந்த கடிதத்தில் கோவை செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், திங்கள்கிழமை நடந்த மோதலில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்பு கருதி தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தனித்தனியாக தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“