காவிரி நீர் விவகாரம்: கர்நாடக முதல்வரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

முதல்வர் சித்தராமையாவின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

காவிரி நீரைப் பெறுவது தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களூரு செல்கிறார்.

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடக் கோரி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர். டெல்டா மாவட்ட சம்பா பயிரை காப்பாற்றும் வகையில், பெங்களூரூ சென்று கர்நாடகா முதலமைச்சரை சந்தித்து காவிரி நீரை திறந்து விடக் கோரி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை, சந்திக்க நாள் மற்றும் நேரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, கர்நாடக முதல்வர், தமிழக முதல்வருடான சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கிய பின்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பகுதி அமைச்சர்களுடன் பெங்களூரு செல்கிறார். காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சம்பா பயிரை பயிரிட்டு விட்டு, தண்ணீர் இல்லாமல் கவலையடைந்திருக்கும் இவ்வேளையில், முதல்வரின் இந்த பயணம் நல்ல முடிவை பெற்று தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

×Close
×Close