Edappadi K Palaniswami | CM MK Stalin: ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் தி.மு.க அரசின் முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா? என முன்னாள் முதல்வரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:-
ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில் ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா, பிறகு சிங்கப்பூர் சுற்றுப்பயணம், 2024-ம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிறகு ஜனவரி 27-ல் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் என்று தமிழ்நாட்டில் அந்நிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என அயராது, உறங்காது இரவும் பகலும் உழைக்கும் முதல்-அமைச்சரின் முயற்சிகளால், உண்மையிலேயே தி.மு.க. ஆட்சியில் 32 மாதங்களில் எவ்வளவு நேரடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.
அதன்படி எத்தனை தொழிற்சாலைகள் செயல்படத் துவங்கியுள்ளன அதன்மூலம் எவ்வளவு நபர்களுக்கு (தமிழர்களுக்கு) வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது; புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எவ்வளவு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு அரசை அணுகியுள்ளன என்றும் இந்த அரசு முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று சட்டமன்றத்திலும், பேட்டிகளிலும் நான் பலமுறை வலியுறுத்தி உள்ளேன்.
குறிப்பாக, தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப் பயணமாக (27.1.2024) அன்று ஸ்பெயினுக்குச் சென்ற தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டதாகவும், ஸ்பெயின் நாட்டின் முன்னணித் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இதையடுத்து பல தொழில் நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாகவும், பல நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு நேற்று (7.2.2024), பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு தொன்றுதொட்டு உற்பத்தி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் காரணமாக, தொழில் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 1992-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 'உலகமயமாக்கல்' மற்றும் 'தாராள மயமாக்கல் கொள்கைகளை' இந்தியா ஏற்று செயல்படுத்தியதன் காரணமாக, பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வந்தன.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாதுரியத்தாலும், தொலைநோக்கு மற்றும் சிறந்த அறிவாற்றலாலும் தமிழ்நாட்டிற்கு பல பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்கள். 2015-ல் உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். இதன் காரணமாக, தமிழ்நாடு இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாக மாறியது. அதாவது, மராட்டிய மாநிலத்தை அடுத்து தமிழ்நாடுதான் உள்நாட்டு உற்பத்தி 8.47 பங்களிப்பை அளித்து இந்தியாவின் முக்கிய தொழில் வளம் மிக்க மாநிலம் என்ற பெயரைப் பெற்றது.
குறிப்பாக, அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் அமைதியான சட்டம்-ஒழுங்கு, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள், தடையில்லா மின்சாரம், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் போன்ற சிறப்பு அம்சங்களை ஏற்படுத்தி, அதனை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாகவும், அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் 2015 மற்றும் 2019 ஆண்டுகளில், இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டது. அதில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முறையே சுமார் 60% மற்றும் சுமார் 90% நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், தொழில் நிறுவனங்கள்/தொழில் முதலீட்டாளர்கள் எளிதில் என்னை அணுகக்கூடிய வகையில் இருந்ததால், கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட பல தொழில் முதலீடுகளை ஈர்க்க முடிந்தது. ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டு, எனது தலைமையிலான உயர்மட்டக் குழுவில் தொழில் முதலீட்டாளர்களின் குறைகள் உடனடியாக களையப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் வளம் பெருகியது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் உயர்மட்டக் குழு, அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டதால் எந்தவிதமான பயனுமில்லை. மீண்டும் கோப்புகள் பல அமைச்சர்கள் வழியாக முதல்-அமைச்சர் வரை செல்ல வேண்டியுள்ளது.
2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் முதலீட்டினைக் கொண்டு வருவேன் என்று கூறியதற்கு இதுநாள் வரை வரைவு அறிக்கை எதுவும் தி.மு.க. அரசால் வெளியிடப்படவில்லை. ஸ்பெயின் பயணத்தினால் தமிழகத்திற்கு மூன்று நிறுவனங்கள் மூலம் 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
20 நாட்களுக்கு முன்பு, சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே. ஆனால் 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதல்-அமைச்சர் ஸ்பெயினுக்கு சுற்றுப் பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது முதலீட்டை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இதை முதல்-அமைச்சர்தான் விளக்க வேண்டும்.
மேலும், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ள 3 நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதல்-அமைச்சர்தான் விளக்க வேண்டும். எனவே, திமுக அரசின் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா?
— AIADMK (@AIADMKOfficial) February 8, 2024
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின்… pic.twitter.com/NEnH9U6WSz
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.