அ.தி.மு.க ஒன்றும் பாஜகவின் பி டீம் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அவர் பேசியதாவது “ கூட்டணி என்பது மாறுபடக்கூடியது. அது அவ்வப்போது தேர்தல் நேரத்தில் அமைப்பது. ஆனால் கொள்கை என்பது நிலையானது. அ.தி.மு.க நிலையான கொள்கை கொண்ட கட்சி.
அ.தி.மு.க-விற்கு மதம் கிடையாது. சாதி கிடையாது. ஆண் சாதி, பெண் சாதி என்ற இரண்டே சாதி மட்டும்தான் அ.தி.மு.க.வில் இருக்கிறது. அ.தி.மு.க-வினர் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்கள் உடன் சகோதரத்துவத்துடன் பழகுவார்கள். அனைத்து மதத்தையும் நேசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் .
இஸ்லாமியர்கள் என்றாலும் சரி, கிறிஸ்தவர்கள் என்றாலும் சரி, அவர்களின் மதம் அவர்களுக்கு புனிதமானது. இது ஜனநாயக நாடு. இங்கே யாரும் யாருக்கும் அடிமைகள் கிடையாது. அனைவரும் அவர்களின் மதத்தை பின்பற்றி வாழக்கூடியதாக இந்தியா இருக்கிறது. அதைத்தான் அதிமுகவும் பின்பற்றுகிறது.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதும்தான், இஸ்லாமியர்கள் குறித்த நினைவு முதல்வர் ஸ்டாலினுக்கு வருகிறது. இஸ்லாமியர்களின் உணர்வுகளை குறித்து நான் பேசியபோது, இப்போதுதான் இஸ்லாமியர்கள் மீது திடீர் பாசம் வந்ததாக முதல்வர் பேசினார்.
ஆனால் அப்படி இல்லை. நான் எப்போதும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன். எந்த சாதிக்கும் அதிமுக அடிமை கிடையாது. எந்த மதத்துக்கும் அதிமுக விரோதி கிடையாது. அதிமுக-வை பார்த்து அப்படி கேட்டதற்கு காரணம் இருக்கிறது. ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க அரணாக இருப்பதுபோல மாயத்தோற்றத்தை உருவாக்கினார்.
பா.ஜ.க-விலிருந்து நாங்கள் விலகியதால், சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்ற அச்சம் முதல்வருக்கு வந்துவிட்டது. அதிமுக ஒன்றும் பாஜகவின் பி டீம் கிடையாது. நாங்கள்தான் ஒரிஜினல் ஏ டீன். பா.ஜ.க அமைச்சரவையில் இருந்தபோதே கருத்து வேறுபாடு ஏற்பட அதை தூக்கி எறிந்த கட்சி அ.தி.மு.க.” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“