Advertisment

'மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியது தி.மு.க அரசு': கோவையில் இ.பி.எஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் .

author-image
WebDesk
New Update
sasesd
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் .

Advertisment

சென்னை உட்பட வட மாவட்டங்களிலும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு தவறியதாக குற்றம் சாட்டினார்.

 மேலும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்சார விலை உயர்வை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி.கே.பழனிச்சாமி பேசியதாவது,'சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஒரு வாரத்திற்கு முன்பு தகவல் அளித்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

 அதி கனமழையால் ஏற்பட்ட கடும் சேதங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இதனை தவிர்த்து இருக்கலாம்.அதிமுக ஆட்சியின் போது பருவமழை பெய்வதற்கு முன்பே அரசு அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, குறிப்பாக சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அடைப்புகளை சீர் செய்வதும், நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளையும் மேற்கொண்டும், தாழ்வான பகுதிகளுக்கு மோட்டார்கள் முன்னெச்சரிக்கையாக கொண்டுவரப்பட்டு சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 அதிமுக ஆட்சியின் போது வெள்ள பாதிப்புகள் ஏற்படும் போது அம்மா உணவகங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.கனமழை மற்றும் புயல் குறித்த வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவல்களை ஊடகத்தின் மூலம் பொது மக்களிடம் எச்சரித்து, அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள், பால் பவுடர் ஆகியவற்றை சேகரித்துக் கொள்ள எச்சரித்தோம். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் திமுக அரசு மேற்கொள்ளாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

 தென் மாவட்டங்களிலும் அதிகன மழை பெய்யும் என முன்னெச்சரிக்கையாக தகவல் தெரிவித்த போதும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

 குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என முன்கூட்டியே தகவல் அளிக்காததால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏராளமான மக்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, உடமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.ஏரல், காயப்பட்டணம் ஆகிய பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் அங்குள்ள உப்பளங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் மழையால் பாதிக்கப்படாமல் இருந்திருக்கும்.

 மழை பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் நான் சென்று பார்க்கும் வரை எந்த ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் அங்கு வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.வக்கீல் ஓடை தூர்வாரும் பணிகளுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிமுக அரசு உரிய நிதியை ஒதுக்கி பணிகளை மேற்கொண்டது. அதற்குப் பிறகு வந்த திமுக அரசு நிதியை முறையாக பயன்படுத்தாமல், பணிகளை துரிதப்படுத்தாமல் இருந்ததால் கனமழையின் போது வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

 கஜா புயல், வர்தா புயல், தானே புயல் என அதிமுக ஆட்சியில் பல்வேறு பேரிடர்கள் வந்த போதும் அதனை அதிமுக அரசு மிகச் சிறப்பாக கையாண்டு மக்களை பாதுகாத்தது. இந்த புயல்களில் ஏற்பட்ட கடுமையான சேதங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியது.

 இந்த புயல்களின் போது கடுமையான காற்று வீசியது இதனால் மின் கம்பங்கள் சேதமடைந்தன. ட்ரான்ஸ்ஃபார்மர்கள் சேதம் அடைந்தன. அதை சிறப்பாக கையாண்டு சரி செய்தோம். ஆனால் இந்த மிக்ஜாம் புயலின் போது அதிகமான காற்று இல்லை. இருந்தும் எந்த சீரமைப்பு பணிகளும் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

 புயல் நிவாரண நிதிக்காக மத்திய அரசை அரசிடம் கேட்பது மட்டுமல்லாமல் மாநில அரசின் நிதியை பயன்படுத்தி உடனடியாக மக்களை மீட்டெடுக்க திமுக அரசு தவறியது.திமுக மத்திய அரசை குறை கூறுவதும், மத்திய அரசு மாநில அரசை குறை கூறுவதையும் தாண்டி மக்களுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

 மக்கள் பாதிக்கப்படும்போது உரிய நிவாரண நிதியை மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.எண்ணூர் முகதுவாரத்தில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்த சேதம் ஏற்பட்டிருக்காது.

 கொரோனா பாதிப்பிற்கு பிறகு சிறு, குறு, நடுத்தர தொழில் மெல்ல சீரடைந்து வந்த நிலையில், திமுக அரசு அதிக மின் கட்டண உயர்வை அமல்படுத்தி அந்நிறுவனங்களை மேலும் பாதிப்படையச் செய்துள்ளது. இதுகுறித்து பலமுறை சட்டமன்றத்தில் நான் பேசியபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்று தமிழகம் முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் இதனை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றனர். இவர்களது கோரிக்கையை கருத்தில் கொண்டு, மாநில அரசு மின்சார கட்டண உயர்வை ரத்து செய்து, அவர்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

 மேலும், அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்து திமுகவின் ஆர் எஸ் பாரதி சொல்லும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. மக்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்து உரிய வகையில் நாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம். அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம்.

 எமர்ஜென்சி காலத்தில் கைது செய்த காங்கிரஸ் உடன் தான் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. முன்பு பாஜகவோடும் திமுக கூட்டணியில் இருந்துள்ளது.வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்த போதும் திமுக அரசு செயல் இழந்த நிலையில் பொம்மை முதல்வராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

 எங்கள் மீது ஓபிஎஸ் வைக்கும் அனைத்து புகார்களும் ஆதாரமற்றதாக உள்ளது. ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி. அவர் மீது பல வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வந்து அந்த வழக்கில் தண்டனை கிடைக்கும். அவர் குடும்பத்தில் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.என் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கினை வாபஸ் பெறாமல் உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று நிரபராதி என நான் நிரூபித்துள்ளேன்.ஜெயலலிதாவிற்கு ஓபிஎஸ் 2 கோடி கடன் கொடுத்ததாக கூறுவது மிக மோசமான வார்த்தை. அதிமுகவில் இடையில் வந்து சேர்ந்தவர் அவர் நாங்கள் 1985 ஆம் ஆண்டு முதல் கட்சியில் விசுவாசமாக பயணித்து வருகிறோம்' என தெரிவித்தார்.

 செய்முறை: பி.ரஹ்மான்

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment