ஓ.பி.எஸ் உள்ளிட்ட 3 பேர் நீக்கம் குறித்து 10 முறை கடிதம் கொடுத்தும், சபாநாயகர் எங்களது கோரிக்கையை ஏற்க மறுக்கிறார் என்று இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, சட்டமன்றத்தில் இ.பி.எஸ் எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் அளித்த விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது “ சட்டப்பேரவை துணைத் தலைவர் இருக்கை நியமனம் குறித்தும், அதிமுகவில் இருந்து 3 பேர் நீக்கப்பட்டது குறித்தும், 10 முறை சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்.
இதுமட்டும் இன்றி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகலை 23.02.2023 அன்று சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறோம். 28.03.2023 தேதியிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் அவரிடம் வழங்கியிருக்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகலையும் 25.08.2023 அன்று சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறோம். 21.09.2023 அன்று ஒரு நினைவூட்டல் கடிதத்தை கொடுத்தோம். இதைத்தொடர்ந்து 9.10.2023 அன்று மீண்டும் நினைவூட்டல் கடிதத்தைக் கொடுத்திருக்கிறோம். 10 கடிதங்கள் கொடுத்தும்கூட, எங்களது கோரிக்கை நிறைவேறப்படவில்லை. சபாநாயகரை எங்கள் கட்சியை சேர்ந்த கொறடா உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் நேரில் சந்தித்து கேட்டபோதும்கூட அதற்கான சரியான பதிலை அவர் அளிக்கவில்லை.
இதனால் நான் சட்டமன்றத்தில் இதை குறித்து பேசினேன். எங்களது கருத்துகளை முழுமையாக தெரிவிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. எங்களுடைய கோரிக்கை நியாயமான கோரிக்கை. காங்கிரஸ் கட்சியில் 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 18 உறுப்பினர்கள் இருக்கும் அந்த கட்சிக்கு தலைவர் பதவி கொடுக்கின்றனர். துணைத் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டு , தலைவர் அருகில் அமர வைத்துள்ளனர்.
நாங்கள் வைக்கும் கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கிறார். சபாநாயகருக்கான மரபை அவர் கடைபிடிக்கவில்லை. அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் இருப்பதாக கூறுகிறார். அதில் நாங்கள் குறுக்கிடவில்லை. அது சட்டப்பேரவையின் வரம்புக்கு உட்பட்டது. எந்த உறுப்பினரை எங்கு அமரவைக்க வேண்டும் என முடிவு செய்வது சபாநாயகரின் தனிப்பட்ட உரிமைதான். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவரின் அருகில்தான், துணைத் தலைவரை அமர வைப்பது சட்டப்பேரவையின் நீண்ட கால மரபு.
சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் மரபுப்படி நியமிக்கப்படவில்லை. இருக்கை ஒதுக்குவதையும் சபாநாயகர் நிராகரித்தார். அதைத்தான் நாங்கள் வலியுறுத்தினோம். சபாநாயகர் இருக்கும் ஒரு புனிதமான இடம். அதில் அமர்ந்து அவர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்.
சட்டமன்றத்தில் நான் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், கேள்வி எழுப்பும்போது, அமைச்சர்களிடமிருந்தும், முதல்வரிடமிருந்தும் பதில்வர வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அதிக நேரத்தில் சபாநாயகரே பதில் சொல்லிவிடுகிறார். இதனால் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் பதில் சொல்லும் வாய்ப்பு குறைகிறது. இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் மற்றும் இருக்கை குறித்தும், நீதிமன்றமே அதிமுகவில் இருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி, அந்த மூவரையும் சபாநாயகர் எக்கட்சியையும் சாராதவர்கள் என்று அறிவிக்க வேண்டும். ஆனால் எந்த மரபும் கடைபிடிக்கப்படவில்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“