தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் போது அதிமுக குறித்து விஜய் விமர்சிக்காதது ஏன் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி. சாலையில் கடந்த 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய கட்சி தலைவர் விஜய், தனது கொள்கைகள், கொள்கை தலைவர்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
மேலும், திராவிட மாடல் அரசு என்ற பெயரில் மக்கள் விரோத அரசு செயல்படுவதாக தி.மு.க.வை அவர் நேரடியாக விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து, விஜய் தனது உரையில் அ.தி.மு.க.வை விமர்சிக்கவில்லை எனவும், அவர்களுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவத் தொடங்கியது.
இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க மாநாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்படி, ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகள் உள்ளன. தனது கட்சியின் கொள்கைகள் குறித்து விஜய் தெரிவித்துள்ளார். அதில் நாம் கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை எனக் கூறினார்.
மேலும், திமுகவை நேரடியாக விமர்சித்த போதிலும், அதிமுக தொடர்பாக விஜய் விமர்சனம் முன்வைக்காத காரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியுடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுக சரியாக செயல்பட்டதால் விமர்சனம் செய்யவில்லை எனத் தெரிவித்தார். மேலும், அதிமுக தலைமையை ஏற்று விஜய் கூட்டணி அமைத்தால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, கற்பனைகளுக்கெல்லாம் பதில் கூற முடியாது எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் கூட்டணி குறித்து தற்போது தெரிவிக்க முடியாது எனக் கூறினார். மேலும், கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு அமைப்பது எனவும், கொள்கை என்பது கட்சிக்கு நிலையாக இருப்பது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதேபோல், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சித்த இபிஎஸ், ஒரே கொள்கை உடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார் எனவும், அவ்வாறு இருக்கும்பட்சத்தில் ஏன் தனியாக செயல்பட வேண்டுமெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“