/indian-express-tamil/media/media_files/2025/08/26/srirangam-eps-2025-08-26-09-02-27.jpg)
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற எழுச்சி பயணத்தின் ஒருபகுதியாக, மணப்பாறை, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளில் மக்களைச் சந்தித்து உரையாற்றினார். திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், அ.தி.மு.க.வின் எதிர்காலத் திட்டங்களையும் அவர் முன்வைத்தார்.
தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு மற்றும் வரி அதிகரிப்பு:
அமைச்சர் நேருவின் துறையில் சொத்துவரி, குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி ஆகியவை 100% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளன. குப்பைக்கும் வரி விதித்த ஒரே அரசு திமுக அரசுதான். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அரிசி, எண்ணெய், பருப்பு என அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் விலைவாசியைக் கட்டுப்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டன. கட்டுமானப் பொருட்களான எம்.சாண்ட், ஜல்லி, கம்பி, செங்கல், சிமெண்ட் ஆகியவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இது ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை சிதைத்துவிட்டது.
ஹைட்ரோகார்பன் திட்டங்கள்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு இந்த அரசு அனுமதி கொடுத்துள்ளது. இது விவசாய விரோத செயல். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, மீத்தேன் திட்டத்தை நிறுத்தியது அதிமுக அரசு. இந்த அரசுக்குத் தெரிந்துதான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை ஏமாற்றி இந்த அரசு இரட்டை வேடம் போடுகிறது.
சுகாதாரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு:
திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது அமைச்சர் நேருவின் துறை சார்ந்த பிரச்னை. திருச்சி அரசு மருத்துவமனையின் அவல நிலை குறித்து திமுக கூட்டணியில் உள்ள 'தீக்கதிர்' பத்திரிகையே செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் மருந்து, மருத்துவர்கள் பற்றாக்குறை, சுகாதாரமின்மை, எலிகளின் நடமாட்டம் எனப் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. டிஜிபி 2.0, 3.0, 4.0 எனச் சொல்லிவிட்டு ஓய்வு பெற்றதே மிச்சம். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டுகள்:
திருச்சி பேருந்து நிலையம், அமைச்சர் நேருவின் நிலத்தின் மதிப்பு உயர வேண்டும் என்பதற்காக அங்கு கட்டப்பட்டது. சிதம்பரம் செட்டியார் அன்னதான டிரஸ்டுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம், அதிகாரத்தைப் பயன்படுத்தி அபகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் குழந்தை முதலியார் தோட்டத்தில் உள்ள 18 ஏக்கர் கோயில் நிலத்தை ஜி ஸ்கொயர் நிறுவனம் முறைகேடாகப் பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த சொத்துகள் மீட்கப்படும்.
தி.மு.க.வின் குடும்ப அரசியல்:
"உதயநிதிதான் முதல்வர்" என அமைச்சர் ரகுபதி பேசியது, திமுகவின் குடும்ப அரசியலை வெளிப்படுத்துகிறது. "உதயநிதிக்கு பின் இன்பநிதியையும் ஏற்றுக்கொள்வோம்" என அமைச்சர் நேரு பேசியது அடிமைத்தனத்தின் உச்சம். திமுக ஒரு குடும்பக் கட்சி; அதிமுக மக்களுக்கான கட்சி.
நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள்:
திமுகவின் 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு மானியம், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து போன்ற வாக்குறுதிகள் வெறும் பேச்சாகவே உள்ளன. நீட் தேர்வு ரகசியம் தெரியும் என்ற திமுகவினரின் பேச்சைக் கேட்டு 25 மாணவர்கள் உயிரிழந்ததற்கு அவர்களே முழுப் பொறுப்பு.
தனது பேச்சின் தொடக்கத்தில், ஸ்ரீரங்கம் அம்மாவுடைய தொகுதி என்று குறிப்பிட்டு, மக்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்:
17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 67 கலை அறிவியல் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக், 4 பொறியியல், 7 சட்டக் கல்லூரிகள், 7.5% உள் இடஒதுக்கீடு மூலம் 2,818 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆனது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 5 முறை தேசிய விருது, தமிழ்நாடு முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள், விவசாயிகளுக்கு உழவர் நலத் திட்டங்கள், பொங்கல் பரிசு ரூ.2,500, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள். தாலிக்குத் தங்கம் திட்டம்.
அதிமுகவின் சாதனைகள்:
உயர்கல்வியில் இந்தியாவுக்கே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளைப் பெற்றது. 5 ஆண்டுகளாக தேசிய அளவில் கிருஷ்கர்மா விருதைப் பெற்றது.
தி.மு.க.வின் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்:
அதிமுகவின் பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. குறிப்பாக, அம்மா மினி கிளினிக்குகள் மூடியது ஏழைகளுக்குச் சிகிச்சை மறுக்கும் செயல். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்பட்ட அத்தனை திட்டங்களும் மீண்டும் கொண்டுவரப்படும். 4,000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்:
நான்காண்டுகளாக மக்களைச் சந்திக்காத முதல்வர், இப்போது 46 பிரச்சனைகள் இருப்பதை கண்டுபிடித்து, விளம்பரத்துக்காக வீடு வீடாக மனு வாங்குகிறார். 7 மாதத்தில் இதைச் செய்ய முடியுமா? திமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தன. இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது தவறானதா? அதிமுகவும், பாஜகவும் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்தில் இணைந்துள்ளன.
புதிய வாக்குறுதிகள்:
ஸ்ரீரங்கம் தொகுதியில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ₹75,000 மானியம் வழங்கப்படும். திருச்சி ராணுவத் தளவாட உதிரிபாகங்கள் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களுக்குக் கான்கிரீட் வீடுகள், தீபாவளிக்கு சேலை வழங்கப்படும். இறுதியாக, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்தார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.