போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு செயலற்று உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6 கிலோ, ரெட்ஹில்ஸ் அருகே குடோன் ஒன்றில் 1 கிலோ என 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
சொல்லாட்சி- செயலாட்சி என்று எதுகை மோனையில் விளம்பர வசனம் மட்டும் பேசும் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் "செயலற்ற ஆட்சி"யாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு, தனக்கு வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமேனும் அக்கறை இருப்பின், நம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்,’ என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“