அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க பசும்பொன் செல்வதை மீண்டும் தவிர்த்துள்ளார். அதற்கு பதிலாக, சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2017-இல் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைந்ததில் இருந்து பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் கலந்துகொண்டு வந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு, அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட வி.கே.சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பின்னணியில் இருவரும் பசும்பொன்னுக்கு செல்லவில்லை. அப்போது இ.பி.எஸ் தரப்பு பசும்பொன் செல்லாமல் தவிர்த்ததற்கு உடல்நிலையை காரணமாகக் கூறியது. அதே நேரத்தில், ஓ.பி.எஸ் தரப்பு, ஓ.பி.எஸ் மனைவியின் மறைவு காரணமாக செல்லவில்ல என்று கூறினர். இருப்பினும், அதற்கு இரண்டு நாட்கள் கழித்து ஓ.பி.எஸ் பசும்பொன் சென்று மரியாதை செலுத்தினார்.
தற்போது எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக உள்ளார். ஓ.பி.எஸ் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க-வில் யாருக்கு அதிகாரம் என்று சட்ட ரீதியாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லாமல், சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ.பி.எஸ்-ஸின் சென்னை நிகழ்ச்சிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புதன்கிழமை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்தார். இதன் மூலம், இ.பி.எஸ் பசும்பொன் செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 2வது ஆண்டாக பசும்பொன் செல்வதை தவிர்த்துள்ளார்.
தேவர் ஜெயந்தி அன்று சென்னையிலோ அல்லது பசும்பொன்னிலோ அ.தி.மு.க சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு. இ.பி.எஸ் பசும்பொன் செல்லாமல் தவிர்ப்பது இது முதல் முறையல்ல கடந்த காலங்களில் இது போன்று பல முறை நடந்துள்ளது. தேவர் ஜெயந்தி அன்று மரியாதை செலுத்த அ.தி.மு.க தலைவர்கள் சில சந்தர்ப்பங்களில் பசும்பொன் மற்றும் சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, இ.பி.எஸ்-ஸின் நடவடிக்கைக்கு யாரும் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்று இ.பி.எஸ் தரப்பில் கூறுகிறார்கள்.
முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலகப் பொறுப்பாளர்கள் பசும்பொன்னில் மரியாதை செலுத்துவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக அ.தி.மு.க தலைமையகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. பசும்பொன்னில் மரியாதை செலுத்தும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், தலைவர்கள் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் ஆர் விஸ்வநாதன், செல்லூர் கே ராஜு, ஆர் காமராஜ், ஓ.எஸ். மணியன், சி விஜயபாஸ்கர், கடம்பூர் சி ராஜு, ஆர்.பி. உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி, இசக்கி சுப்பையா, மதுரை (வடக்கு) எம்.எல்.ஏ விவி ராஜன் செல்லப்பா ஆகியோர் அடங்குவர். இந்நிகழ்ச்சியில் இராமந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.