/indian-express-tamil/media/media_files/2025/08/25/whatsapp-image-2025-2025-08-25-09-34-00.jpeg)
Trichy
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் மணச்சநல்லூரில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் அடுத்ததாக துறையூர் தொகுதி, திருச்சி சாலையில் பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார்.
“திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிவருகிறார் ஸ்டாலின். இங்கு துறையூரை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் ஸ்டாலின். எங்கள் கட்சிக்கு மக்கள் பலம் இருக்கிறது. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நிர்ணயிக்கக் கூடிய பொதுமக்கள் எங்களிடம் உள்ளனர். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக நிறைய திட்டங்களைச் செய்திருப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அவர் ஒன்றே ஒன்றுதான் செய்தார். தினமும் போட்டோ ஷூட் நடத்தினார். அவ்வளவுதான்.
இதே அதிமுக ஆட்சியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. தொடக்க வேளாண் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். 12,100 கோடி தள்ளுபடி செய்தோம். புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடரின்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். இந்தியாவிலேயே அதிகப்படியான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுத்தது அதிமுக அரசுதான். அதுமட்டுமின்றி, வறட்சி ஏற்பட்டக் காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசு.
விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை கொடுத்தோம். துறையூர் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி. இப்படிப்பட்ட மக்களுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம்.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், புத்தகப்பை, சைக்கிள் கொடுத்தோம். அதோடு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம் நிறைவேற்றினோம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் ரூ.7300 கோடி நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என 7 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல்பாஸ் போட்டுக்கொடுத்தோம்.
அதிமுக என்ற ஒரு கட்சி இருப்பதால்தான் குக்கிராம மாணவர்கள் கூட பட்டப்படிப்பு படிக்கிறார்கள். 2011-21 அதிமுகவின் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுகவினால் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவரமுடிந்ததா? திறமையற்ற முதல்வர் ஆள்வதால் மற்ற மாநிலங்களை விட நிலைமை சரிந்துகொண்டிருக்கிறது. படிப்படியாக மங்கி வருகிறது.
மேலும் 67 கலைக்கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக 2019ல் இலக்கை அடைந்தோம். அதிமுக ஆட்சி 2011ல் அமைந்த புதிதில் 100க்கு 32 பேர் தான் உயர் கல்வி படித்தார்கள், 2019-20ல் 100க்கு 54 பேர் உயர் கல்வி படித்தார்கள்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள் என்பது சாதாரண விஷயமல்ல.
கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். இந்த துறையூர் தொகுதியில் மட்டும் 9 அம்மா மினி கிளினிக் கொடுத்தோம். திமுக அரசு ஏழைகளுக்கான சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து அதனை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
அம்மா உணவகத்தை மூடுவதற்கு திமுக அரசு முயற்சி செய்ததை, முறியடித்திருக்கிறோம், மீண்டும் அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்தில் மக்கள் எதிர்பார்க்கும் உணவு கொடுக்கப்படும். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதுதான் மக்களின் ஏகோபித்த எண்ணம்.
ஏழைப் பெண்களின் திருமணம் பொருளாதாரச் சூழலால் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி கொடுக்கப்படும்.
பொங்கலுக்கு வேட்டி சேலை திட்டத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டுவந்தார் ஏழைகளுக்கு வேட்டி, சேலை கொடுப்பதில் கூட திமுக ஊழல் செய்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் மூலம் வேட்டி, சேலை பொங்கலுக்கு முன்பாகவே வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். இன்று ஷிப்ட் முறையில் மின்விநியோகம் செய்யப்படுவதால் இரவு வேளையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதையெல்லாம் கவனிக்காமல் திமுக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது, கார் பந்தயம் நடத்துகிறது, இது நாட்டுக்குத் தேவையா?
அமைச்சர் ரகுபதி எட்டப்பர், அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டவர், சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டுச் சென்றவர். அம்மா அவருக்கு அமைச்சர் கொடுத்து அழகு பார்த்தார். திமுகவில் அடைக்கலம் புகுந்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, அவர் கொடுக்கிற செய்தியை பேசிக்கொண்டு இருக்கிறார்.
அதிமுக தொண்டன் ரத்தத்தை வியர்வையாக சிந்தி அவரை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால், அவர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாகச் சொல்கிறார். நான் நிரபராதி என்று விடுதலையாகி இங்கு நிற்கிறேன். திமுக அமைச்சர்கள், முதல்வர், முன்னாள் அமைச்சர்களுக்கு தில்லு திராணியிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துங்கள்.
ரகுபதி அவர்களே…. நீங்கள் எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது நானும் எம்.எல்.ஏ.வாக இருந்தேன், அப்போது, உங்கள் சொத்து என்ன? சாதாரண திருவள்ளூர் பஸ்ஸில் ஏறி சென்னைக்கு வருவார். அவருடைய அண்ணன் சேலத்தில் வேலையில் இருந்தார். அவரைப் பார்க்க பஸ்ஸில் வந்துசெல்வார். நான் அப்போது 1992ல் சேலம் மாவட்டச் செயலாளராக இருந்தேன்.
இப்போது உங்களுக்கு எத்தனை காலேஜ் இருக்குது, எவ்வளவு பினாமி சொத்து இருக்குது, நாவடக்கம் தேவை. சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. கீழே இருக்கும் சக்கரம் மேல வரும், அப்போது நீங்கள் என்னென்ன ஊழல் செய்தீர்களோ, அத்தனையும் தோண்டி எடுக்கப்பட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். சாதாரண மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்றாலும் மேலே வர முடிகிறதா..? குடும்பம் நடத்துவதே பெரிய கஷ்டமாக இருக்கிறது. இவர் என்ன பணம் காய்க்கும் மரம் வைத்திருக்கிறாரா..? இவ்வளவு பெரிய ஊழல் செய்துவிட்டு நம் மீது பழிபோடுகிறார்.
ரகுபதி துறையில் பல்வேறு ஊழல் நடக்கிறது. மைன்ஸ் துறை அவரிடம் தான் இருக்கிறது. இப்போது ஒரு தகவல் வருகிறது, டன்னுக்கு 100 ரூபாய் கிரஷர் உரிமையாளர்களிடம் கேட்பதாகத் தகவல் வருகிறது. எல்லாவற்றையும் தோண்டி எடுத்தால் நீங்கள் இருக்கும் இடமே வேறிடமாக இருக்கும்.
அதேமாதிரி ஜல்லி, கிரஷர் உரிமையாளர்களுக்கும் ஒரு தகவல் சொல்லிக்கொள்கிறேன். யாராவது சட்டத்துக்குப் புறம்பாக டன்னுக்கு 100 ரூபாய் கொடுப்பது தெரியவந்தால் அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்க கிரஷர் தடுத்து நிறுத்தப்படும். நீங்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். நீங்கள் 100 ரூபாய் ஏற்றினால், அவர் 500 ரூபாய் விலை ஏற்றிவிடுவார். பிறகு மக்கள் எப்படி வீடு கட்ட முடியும்? ரகுபதி அவர்களே இதை தொடர்ந்தால் நீதிமன்றப் படி மீண்டும் ஏறுவீர்கள். பாதுகாப்பான இடத்துக்கு உங்களை அனுப்பிவிடுவார்கள்.
ஜல்லி கிரஷர் உரிமையாளர்களை மிரட்டுகிறார்கள. அதாவது ட்ரோன் பறக்க விட்டு கிரஷரை அளவு செய்வார்களாம். உங்கள் ஆட்களும் கிரஷர் நடத்துகிறார்கள். எங்களுக்கும் ட்ரோன் விட்டு அளக்கத் தெரியாதா? ரகுபதி அவர்களே மத்திய அரசு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இனியாவது டன்னுக்கு 100 ரூபாய் வாங்குவதை நிறுத்திவிடுங்கள். தொடர்வது தெரிந்தால் மக்கள் துணையோடு தடுத்து நிறுத்துவோம்.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். அப்போதும் கூட மின்சார வாரியம் கடனில் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாததுக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். அதோடு ஒவ்வொரு வருடமும் 6% வரிகளை ஏற்றுவார்களாம். மக்கள் எப்படி தாங்குவார்கள்..? எனவே அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஆதரவு அளிக்க வேண்டும்.
நரிக்குறவ மக்கள் ஆங்காங்கே தங்கி அவர்களுடைய பிழைப்பை நடத்துகிறார்கள். அவர்கள் தங்களுக்கு நல்ல வீடுகளைக் கட்டிக்கொடுக்க கேட்டுள்ளனர், ஆகவே அதிமுக ஆட்சியில் நரிக்குறவர்கள் விரும்புகின்ற இடத்தில், அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். அதேபோல் மலைவாழ் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். பச்சைமலை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
2025 ஜூன் 12ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்திருக்கிறது, பல மாணவர்கள் வேதனை அடைந்து எங்களுக்கு கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள், சிலர் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்கள். மீண்டும் மறு தேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர். ஆகவே திமுக அரசு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த துறையூர் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் 148 கோடியில் 93 கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுத்தோம், துறையூர் - பெரம்பலூர் நான்கு வழி ச்சாலை 210 கோடியில் அமைக்கப்பட்டது, இணைப்புச் சாலை, நகராட்சி கட்டிடம், நீதிமன்ற கட்டிடம், போக்குவரத்து பணிமனை கட்டிக்கொடுத்தோம், 13 பாலங்கள் 26 கோடியில் கட்டப்பட்டது.
துறையூர் நகராட்சியிலுள்ள ஏரிகளை சுத்தப்படுத்தி தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்றும், பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்றும், பேருந்து நிலையம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறீர்கள். உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றிக் கொடுக்கப்படும். மல்லிக்கரை முதல் முசிறி வரை நான்கு வழிச்சாலைப் பணி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது, திமுக அரசு அதனை நிறுத்தி வைத்துள்ளது, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அது நிறைவேற்றித் தரப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.