அ.தி.மு.க ஆட்சியில், மதுரை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர்த் திட்டங்களை ஸ்டாலினின் தி.மு.க அரசு முடக்குவதைக் கண்டித்தும்; மதுரை மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர்படுத்த வலியுறுத்தியும் பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத்துவதைக் கண்டித்தும், வண்டல் மண் அனுமதி என்ற போர்வையில் கனிம வளம் கடத்தலைக் கண்டித்தும் அ.தி.மு.க சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் நவம்பர் 16-ம் தேதி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் வாழும் மக்கள் அனைத்து வகைகளிலும் சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும் மக்கள் எவ்வித துன்பத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகாத வகையில் தங்கள் வாழ்க்கையை நடத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடும் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் மக்கள் நலன் காக்கும் பல்வேறு முத்தான திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டதை இந்த நாடே நன்கு அறியும்.
இந்நிலையில், நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலினின் அரசு கடந்த 42 மாத காலமாக, அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கியும் கிடப்பில் போட்டும் வைத்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரிய விஷயமாகும்.
அந்த வகையில், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட லோயர்கேம்ப் - மதுரை மாநகராட்சி - இரும்புக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இத்திட்டத்தை முடக்கியுள்ள ஸ்டாலினின் தி.மு.க அரசை கண்டித்தும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்த, திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள விரிவாக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதைக் கண்டித்தும், பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர்படுத்த வலியுறுத்தியும் வண்டல் மண் அனுமதி என்ற போர்வையில் கனிம வளம் கடத்தலைக் கண்டித்தும், மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு மக்கள் விரோத செயல்களைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் ஸ்டாலினின் தி.மு.க அரசைக் கண்டித்தும் அ.தி.மு.க மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நவம்பர் 16-ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் அ.தி.மு.க நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி. தங்கமணி தலைமையிலும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான வி.வி. ராஜன் செல்லப்பா முன்னிலையிலும் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.