பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தி.மு.க-வினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புராணங்களில் கேள்விப்பட்ட அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்களை பார்த்ததில்லை என்ற குறையை போக்க தி.மு.க-வினர் அவதாரம் எடுத்து வந்துள்ளனர் என்று இ.பி.எஸ் கடுமையாக சாடியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 கல் குவாரிகளை ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியிட்டது. கல் குவாரிகளை ஏலம் கோருபவர்களின் விண்ணப்பங்களைப் பெறுவதற்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது. அங்கே டெண்டர் சமர்ப்பிக்க தி.மு.க-வினர் வேறு எவரையும் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவருமான கலைச்செல்வன், தனது தம்பி முருகேசன் என்பவருக்கு கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்காக பா.ஜ.க தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அங்கே இருந்த தி.மு.க-வினர் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்காக வந்த பா.ஜ.க-வைச் சேர்ந்த கலைச்செல்வன், முருகேசன் ஆகியோரை தடுத்ததால் பா.ஜ.க - தி.மு.க-வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தடுக்க வந்த டி.எஸ்.பி பழனிசாமி, நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பையன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா, பெரம்பலூர் எஸ்.ஐ சண்முகம், பெண் காவலர் லட்சுமி, பெரம்பலூர் மாவட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன், புவியியல் துறை வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்பட தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவுகளில் பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்கள் என்று புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம்..., நாம் யாரும் அவர்களைக் கண்டதில்லை.. அந்தக் குறையைப் போக்க ஆளும் தி.மு.க-வினர் அவதாரம் எடுத்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சமாகும்.” என்று எடப்பாடி பழனிசாமி தி.மு.க-வினரை கடுமையாக சாடியுள்ளார்.
அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்கள்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 31, 2023
என்று புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம்...,
நாம் யாரும் அவர்களைக் கண்டதில்லை.. அந்தக் குறையைப் போக்க ஆளும் திமுக-வினர் அவதாரம் எடுத்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சமாகும்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… pic.twitter.com/LCNda0jjtI
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ்-ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்கள்
என்று புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம்...,
நாம் யாரும் அவர்களைக் கண்டதில்லை.. அந்தக் குறையைப் போக்க ஆளும் திமுக-வினர் அவதாரம் எடுத்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சமாகும்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (30.10.2023), கல்குவாரிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போக்குவரத்து மந்திரியின் உதவியாளர் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் என்ற பெயரில் சுமார் 300 குண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து கல்குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுக-வினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாக, அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.
திமுக-வினரின் கோரிக்கையை ஏற்க மறுத்த கனிம வளத்துறை உதவி இயக்குநர், அவருடைய உதவியாளர் ஆகிய இருவரும் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
இத்தனை களேபரம் நடந்தும், காவல் துறை உயர் அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ சம்பவ இடத்திற்கு விரைந்து வராதது, இவர்களின் கைகள் ஆட்சியின் மேலிட கோமான்களால் கட்டப்பட்டுள்ளதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து வீடியோ வெளியிட்டு பேட்டி கொடுத்த காவல்துறை உயர் அதிகாரியும், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினும், பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து வீடியோ வெளியிடத் தயாரா?
30.10.2023 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக-வினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துவதோடு, திமுக-வினர் அதிகார மமதையில் தொடர்ந்து வியாபாரிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகிவிட்டது. இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக-வுக்கு, வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல, பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தி.மு.க-வினர் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்குவாரி ஏலத்திற்கான ஒப்பந்தப் புள்ளி கொடுக்க வந்த பாஜகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்திய திமுக ரவுடி கும்பலை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— K.Annamalai (@annamalai_k) October 31, 2023
தவறினால், @BJP4Tamilnadu மாநிலப் பொதுச்…
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்- பதிவிட்டிருப்பதாவது: “பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக பா.ஜ.க தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை தி.மு.க ரவுடி கும்பல் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், தி.மு.க-வினரைத் தடுக்க முயற்சித்த, கனிமவளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டி.எஸ்.பி. பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து எச்சரிக்கை விடுத்த பிறகும், தி.மு.க ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அங்கிருந்த செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படும் அளவுக்கு ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது.
தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, தி.மு.க-வினர் கொண்டு வந்துள்ளனர். தி.மு.க ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்குக் கூட இந்த ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது. பொதுமக்கள் திருப்பி அடித்தால், தி.மு.க ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும். உடனடியாக, ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க ரெளடிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.