அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கே கவலைக்கிடமான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுசூதனன் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. மதுசூதனனின் உடல்நிலை பற்றி வரும் தவறான ஆதாரம் இல்லாத செய்திகளை நம்ப வேண்டாம். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவும் ஒரெ நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக அவைத் தலைவராக உள்ள மதுசூதனனுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று நேற்று (ஜூலை 19) முதல் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இதையடுத்து, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று (ஜூலை 20) மதியம் 1 மணி அளவில் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில், மதுசூதனனின் உடல் நலம் குறித்து எடப்பாடி பழனிசாமி விசாரித்துக்க்கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவும் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு அதிமுக கொடி கட்டிய காரில் வந்தார். எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவும் ஒரே நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலா மருத்துவமனைக்கு வந்திருப்பதை அறிந்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் வரை காரில் வெளியே காத்திருந்த சசிகலா, பழனிசாமி வெளியே சென்ற பிறகு மருத்துவமனைக்குள் சென்று மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். சிறிது நேரம் மருத்துவமனையில் அமர்ந்திருந்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இபிஎஸ் - சசிகலா இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கே பரபரப்பு நிலவியது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா முயற்சி செய்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து தர்மயுத்தம் செய்து கிளர்ச்சி செய்ததால் தடையானது. அதே நேரத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததால், கூவத்தூர் நிகழ்வுகளுக்கு பிறகு சசிகலா சிறைக்கு சென்றார். அவருடைய ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.
ஆனால், விரைவில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்தனர். சசிகலாவையும் அவரது அக்கா மகன் டிடிவி தினகரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினரையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றினார்கள். ஓ.பி.எஸ் துணை முதலமைச்சரானார். இபிஎஸ் 4 ஆண்டு ஆட்சியையும் நிறைவு செய்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக, சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து சிறையில் இருந்து விடுதலையானார். சசிகலா தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாக அறிவித்தார். டிடிவி தினகரனின் அமமுக தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
தேர்தலுக்கு பிறகு, சசிகலா அதிமுக தொண்டர்களுடன் போனில் தொடர்பு கொண்டு தான் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன் என்றும் அதிமுகவை மீட்டெடுப்பேன் என்றும் பேசி வருகிறார். சசிகலா அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டு வருகிறார். இதனால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால், அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் சசிலாவுடன் போனில் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தனர்.
ஆனாலு, சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசுகிற ஆடியோவை வெளியிட்டு வருகிறார். கொரோனா தொற்று பரவல் தனிந்தவுடன், விரைவில் மாவட்டம் தோறும் அதிமுக தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார். இது குறித்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். முன்னாள் அமைச்சர்களும் சசிகலாவை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த சூழலில்தான், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை பற்றி விசாரிக்க் சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் அப்பல்லோ மருத்துவமனை வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் வந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கட்சிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.