சனாதனம் குறித்த அ.தி.மு.க தலைவர்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பிய நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தி.மு.க-வின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையானது.
பிறப்பால் உயர்வு தாழ்வை வலியுறுத்தும் சனாதனம் கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியதற்கு, பா.ஜ.க தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அண்ணாமலை என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி ஒரு பிரிவினர் மனதை புண்படுத்தக் கூடாது என்று கூறினார்.
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் சனாதனம் குறித்த பேச்சுக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து அமைச்சர் உதயநிதியிடம் கருத்து கேட்டபோது, சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே. ஆனால், பா.ஜ.க-வினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர் என்று கூறினார்.
மேலும், சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே. ஆனால், பா.ஜ.க-வினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர். இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பா.ஜ.க-வினர் சனாதனம் குறித்த பிரச்னையை இப்போது கையில் எடுத்துள்ளனர். எதுவுமே மாறக்கூடாது. எலாம் நிலையானது என்பதுதான் சனாதனம் என்று விளக்கம் சொல்கிறார்கள். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒரே மாதிரியாக இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல். எபோதும் பொய்ச் செய்திகளை பரப்புவதுதான் பா.ஜ.க-வின் வேலை. சனாதனம் குறித்த அ.தி.மு.க தலைவர்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.” என்று கூறினார்.
இந்நிலையில், சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை பதில் அளித்தார்.
கோவையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாழ்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கக் கூடிய கட்சிதான் தி.மு.க. இன்றைக்கு சனாதனம் குறித்து பேசுகிறார்கள். இதுதான் வேடிக்கையாக உள்ளது.
அ.தி.மு.க-வை பொறுத்தவரைக்கும் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அதன்பிறகும் சரி.. அ.தி.மு.க. மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அ.தி.மு.க சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்று சொல்லிவிட்டேன். அதற்கு மேல் விளக்கி விளக்கி கேட்கிறீர்கள். சனாதான ஒழிப்பு என்று சொல்லி உதயநிதி ஸ்டாலின் இதை பேசுபொருளாக்கியிருக்கிறார். தமிழ்நாடு இன்று குட்டிச்சுவராகியிருக்கிறது. எல்லா துறைகளிலும் படுபாதாளத்திற்கு போய்விட்டது. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 4 பேரை துடிக்க துடிக்க வெட்டிக்கொலை செய்து இருக்கிறார்கள். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 9 கொலைகள் நடைபெற்று இருக்கின்றன. இப்படி தினம்தோறும் கொலைகள் நடக்காத நாட்கள் கிடையாது.
செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அப்படிப்பட்ட ஊழல்கள், விலை வாசி உயர்வு ஆகியவற்றை மறைப்பதற்கு இன்றைக்கு இந்த நாடகத்தை தி.மு.க அரங்கேற்றியுள்ளது.
இதை எல்லாம் வைத்து மக்களை திசை திருப்புகிறார்கள். எப்பொழுதெல்லாம் திமுகவிற்கு பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் எதோ ஒரு பிரச்சினையை கையில் எடுத்து மக்களை திசை திருப்புவதுதான் வாடிக்கையாக தொடர்கதையாக திமுகவிடம் உள்ளது. அதிமுகவை யாரும் குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஒழுங்காக நாங்கள் நடந்து கொண்டு இருக்கிறோம்” என்று கூறினார்.
அ.தி.மு.க என்பது அண்ணா தி.மு.க அல்ல அமித்ஷா தி.மு.க என்று உதயநிதி விமர்சித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொன்றாக பேசி பேசி தன்னை முன்னிலைப்படுத்த பார்க்கிறார் உதயநிதி. அவர் என்ன சாதனை செய்து விட்டார் என்று அமைச்சராக்கியிருக்கிறார்கள். ஊடகங்கள்தான் அவரை முன்னிலைப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் இதுதான் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் தகுதி. இதை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை ஆட்டிப்படைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
அது ஒருபோதும் நடக்காது. வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. தி.மு.க-வில் கருணாநிதி குடும்பத்தை தவிர்த்து மற்றவர்கள் உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும், கட்சி தலைவராக முடியும், என்று தி.மு.க-வில் சொல்ல முடியுமா? தி.மு.க அமைச்சர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு பிறகு இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்கிறார்கள். அப்படிப்பட்ட அடிமைத்தனமான அந்த கட்சி உள்ளது. சுதந்திரம் கிடையாது. ஒரு குடும்ப ஆட்சியாக உள்ளது. கட்சி கிடையாது. கார்ப்பரேட் கம்பெனி. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.