பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்கு பின்னர் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது, இதனால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இ.பி.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கியும், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இடைகால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கொண்டு வருவது தொடர்பாகவும், கட்சியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் , வைத்தியலிங்கம் உள்ளிடோர் நீக்கம் செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மனாங்களுக்கு எதிராக பன்னீர் செல்வத்தின் சர்பாக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். கட்சியை இப்போது இடைக்கால பொதுச்செயலாளர் பிரதிநிதித்துவப் படுத்தும் நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறு என்று பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கக்கூடிய மனோஜ் பாண்டியன் கட்சி உறுப்பினரே அல்ல என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பொதுக்குழுவுக்கு முன்பாக 4 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமையாக மாற்ற வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களும் விருப்பம் தெரிவித்ததாகவும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டு, எடப்படி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் பதிவு செய்து கொண்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தனிபட்ட சங்க விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால், உள்கட்சி விவகாரங்களில் மனுதாரர் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கூறுவதில் நியாயமில்லை எனவும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவுகளை சிறுபான்மையினர் முடக்க முடியாது எனவும் கட்சியின் விதிகளை முடிவு செய்ய பொதுக்குழுவுக்கு உரிமை இருப்பதை மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செல்லாததாகிவிட்டது, அதனால் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.