Advertisment

மழை நீர் வடிகால் பணிக்கு ரூ.4,000 கோடி - 'வெள்ளை அறிக்கை தேவை': இ.பி.எஸ் கடும் தாக்கு

மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளாமால், நிவாரண உதவிகளை வழங்காமால் இருந்து வரும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami attacks on MK Stalin govt and urges Cyclone Michaung rescue Tamil News

'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்துகிறேன்' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Edappadi-k-palaniswami | cm-mk-stalin: மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளாமால், நிவாரண உதவிகளை வழங்காமால் இருந்து வரும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 4 பக்க அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு:- 

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் உட்பட, மாநில அளவில் புயல் அல்லது கனமழை குறித்து எனது தலைமையிலான அரசில் முன்னெச்சரிக்கைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, வடகிழக்குப் பருவமழையினை எதிர்கொள்வதற்கு தக்க ஆலோசனை வழங்கப்படும். 

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அந்த மண்டலத்தில் உள்ள வார்டுகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள வருவாய், மாநகராட்சி, காவல்துறை, பெருநகர குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, மக்கள் நல்வாழ்வுத் துறை,மின்சார வாரியம் போன்ற தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் அதை எப்படி அப்புறப்படுத்துவது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே ஆய்வு செய்து, மழைக் காலங்களில் தேங்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்தத் திட்டமிடுவார்கள்.

இப்பணிகள் எல்லாம் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே திட்டமிடப்படும். மேலும், கால்வாய்களில் தேங்கியுள்ள மண் (சில்ட்) பருவமழைக்கு முன்னதாகவே அப்புறப்படுத்தப்படும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை மற்றும் புயல் பற்றிய தகவலை வழங்கியவுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிவாரண மையங்கள், உணவு ஏற்பாடுகள், சுகாதார வசதிகள், படகுகள் தயார் நிலையில் இருப்பதோடு, மீட்புப் பணிகளில் ஈடுபட மாநில மற்றும் மத்திய அரசின் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருப்பார்கள். இதனால், மீட்பு பணிகள் எங்கள் ஆட்சியில் சுணக்கமின்றி நடைபெற்றது.

மேலும் எங்கள் அரசு, மக்களுக்கு 5 நாட்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், காய்கறிகள், டார்ச்லைட், மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருட்கள், போதுமான அளவு குடிநீர் மற்றும் அவர்களின் வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை நிரப்பிக்கொள்வது போன்றவற்றையும் மற்றும் முக்கிய ஆவணங்கள், மாணவர்களின் பள்ளிச் சான்றிதழ்கள் போன்றவற்றை பாதுகாப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு செய்யும். ஆனால், இந்த விடியா தி.மு.க அரசு முன்னெச்சரிக்கையினையும் மக்களிடம் செய்யத் தவறிவிட்டது.

இந்திய வானிலை மையம் ஐந்து நாட்களுக்கு முன்பே ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கிய பின்பும், விடியா திமுக அரசு மழை பெய்த பின்பு ராட்சத மோட்டாருக்கு ஏற்பாடு செய்வதும், மற்ற ஏற்பாடுகளை செய்வதும் இந்த பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.

4.12.2023 அன்று தலைமைச் செயலாளர் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்தபோது, மழை நீரை அகற்றுவதற்கு பல்வேறு இடங்களில் ராட்சத மோட்டார்களை ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த ராட்சத மோட்டார்கள் எப்போது வந்து தேங்கிய தண்ணீரை அகற்றும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே, தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும், தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு, வாடகைக்கு வாங்கப்பட்ட சிறுசிறு மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு டீசல் வாங்குவதற்கு பணம் தரவில்லை என்பதால் பல இடங்களில் அந்த மோட்டார்கள் இயங்காமல் இருந்ததாக அப்பகுதி மக்கள் விடியா திமுக அரசை குறை கூறிய நிகழ்வுகளும் 5.12.2023 அன்று நடந்தன.

மழை நின்று மூன்று நாட்கள் ஆன நிலையில், இப்போது வரை சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சுமார் 38,500 பிரதான உட்புற சாலைகளில், சுமார் 20 ஆயிரம் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. அதேபோல், சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல், மழை நீர் வடியாமல், கழிவுநீருடன் கலந்து தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளது.

எங்கள் ஆட்சிக் காலத்தில், கனமழை மற்றும் புயல் காலங்களில் முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு மற்றும் பாய், போர்வை போன்ற பொருட்களும் வழங்கப்படும். ஆனால், தற்போது இந்த ஆட்சியில் 5.12.2023 அன்று தான் ஒருசில இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிய வருகின்றன.

5.12.2023 அன்று வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளை நான் நேரில் சென்று பார்வையிட்டு, கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன். 6.12.2023 காலை வரை அரசின் சார்பில் எந்தவிதமான நிவாரணப் பொருட்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது. எனவே, உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்துகிறேன்.

6.12.2023 அன்று வெளிவந்த மாலை பத்திரிகைகள், 24 மணிநேர ஊடகச் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும், இன்னும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளன. குறிப்பாக, ஒரு லட்சம் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது என்று செய்திகள் தெரிவித்தன.

அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் பாடி, கொரட்டூர், முகப்பேர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. குறிப்பாக, இந்த விடியா திமுக அரசின் இரண்டு முறை மின் கட்டண உயர்வால் ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருந்த இத்தொழிற்சாலைகளுக்குள் தற்போதைய மழை வெள்ளம் புகுந்து இயந்திரங்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளதாகவும், வெள்ள நீரை அகற்றி, மீண்டும் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும் என்று தொழிற் கூட்டமைப்பினர் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த விடியா திமுக அரசு இத்தொழிற்பேட்டைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மின்கட்டண சலுகை அளிக்கவும் வலியுறுத்துகிறேன்.

ஒருசில இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட இந்த விடியா திமுக அரசு, பணிகள் முடிவுற்ற கால்வாய்களை சரியான முறையில் இணைக்கத் தவறியதால், தாழ்வான பகுதிக்கு குறுகிய காலத்தில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது என்று தெரிய வருகிறது. எனவே, இதை உடனடியாக ஆய்வு செய்ய வலியுறுத்துகிறேன். இந்த மழையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மற்றும் மந்திரிகளும் வாய்ச் சொல்லில் ஜாலம் காட்டுகிறார்கள். இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களை முறையாகக் கையாளாமல், இன்று இம்மழையினால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரும், மந்திரிகளும் ஊடகங்களுக்கு தங்கள் முகங்களை காண்பிப்பதற்கு முனைப்பாக உள்ளனர். இதுவே அம்மா ஆட்சியில், எங்களது அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் தங்கி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்த மழையின் போது மின் கம்பங்கள், மின் கோபுரங்கள் பெருமளவில் சேதமடைந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும், மின் துண்டிப்பு முழுமையாக நடைபெற்றது. மின் இணைப்பு இல்லாத காரணத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ள பொதுமக்கள், மின் மோட்டார்கள் இயங்காமல் குடிதண்ணீருக்கும், இயற்கை உபாதைகளுக்கும் போதிய தண்ணீர் இன்றி கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும், இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டே மழையின் பாதிப்புகள் மற்றும் இந்த அரசின் அவலங்களை, ஊடங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன் 6.12.2023 மாலை வரை 50 சதவீத மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பால் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். மின்சாரமும் இல்லாமல், ஒருசிலர் வாங்கிய அதிக எண்ணிக்கையிலான பாலும் கெட்டுவிட்டதாகவும், இதற்கு இந்த விடியா திமுக அரசே பொறுப்பு என்றும், பாலுக்காக மக்கள் பால் விற்பனையாளர்களுடன் சண்டை போடுகின்ற நிகழ்வுகளை செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, விடியா திமுக அரசு, உடனடியாக அனைத்து இடங்களுக்கும் மின் இணைப்பை வழங்க வலியுறுத்துகிறேன்.

எங்கெங்கு தண்ணீர் தேங்கி உள்ளதோ, அதனை உடனடியாக சிறப்பு முயற்சி எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்துகிறேன்.

வெள்ள நீரை அப்புறப்படுத்தியவுடன், உடனடியாக ப்ளீச்சிங் பவுடர், பினாயில் கொண்டு சுத்தம் செய்து, நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதுடன், 500 வீடுகளுக்கு ஒரு முகாம் என்று சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட வலியுறுத்துகிறேன்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தை சீர் செய்யவும், அண்டை மாநிலங்களில் இருந்து பாலை உடனடியாகக் கொள்முதல் செய்து மக்களுக்குத் தங்கு தடையின்றி பால் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் அரிசி, பருப்பு, பால், மளிகைப் பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.

சென்னை மாநகரில் சுமார் 4,000/- கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக இந்த விடியா திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நடந்து முடிந்த பணிகளின் பட்டியலை வெளியிட இந்த அரசு தயாரா? பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தரத் தயாரா? பணிகள் 100 சதவீதம் முடிந்த இடங்கள், தொடர்ந்து பணி நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

ஏதாவது சொல்லி, ஏமாற்றி தப்பித்துவிடலாம் என்று இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்கள் நினைத்தால், அதற்குண்டான பதிலை பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் வெளிப்படுத்துவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cm Mk Stalin Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment