முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி தனது 64-வது பிறந்த நாளை இன்று கடந்தார். இது தொடர்பாக தனியாக கொண்டாட்டம் எதுவும் இல்லை. ஓபிஎஸ் வாழ்த்து கூறினார்.
எடப்பாடி க.பழனிசாமி, தடுமாற்றமான அரசியல் சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரது ஆட்சி இன்று கவிழ்ந்து விடும், நாளை கவிழ்ந்து விடும் என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்தன. திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘இந்தப் பொதுக்கூட்ட மேடையில் இருந்து நான் இறங்கும் முன்பாகவே எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிட வாய்ப்பு இருக்கிறது’ என பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
தலைவன் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு தொண்டர்களை வஞ்சிக்கும் தலைவர்களின் மத்தியில், ஒரு தலைவன் உருவாகியுள்ளார், மக்களுக்காக. மக்கள் தலைவர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். #HappyBdayCM @CMOTamilnadu @EPSTamilNadu pic.twitter.com/Y1S81sw8KM
— Hari Prabhakaran (@Hariadmk) 12 May 2018
எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்கட்சிகளால் ஏற்பட்ட பிரச்னையைவிட சொந்தக் கட்சியால் ஏற்பட்ட நெருக்கடிகள் அதிகம்! ஆரம்பத்தில் இவரது ஆட்சியை கவிழ்க்க வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், பிறகு இவருடனேயே இணைந்து துணை முதல்வர் ஆனார். ஆனால் இவரை முதல்வர் ஆக்கியதில் பின்புலமாக இயங்கிய சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ‘எதிரி’ ஆனார்கள்.
பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தனது ஆதரவாளர்களாக தக்க வைத்துக்கொண்டு ஆட்சித் தேரை தடுமாற்றம் இல்லாமல் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அதிமுக.வில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும், முதல்வர் என்ற முறையிலும் கட்சி நிர்வாகிகளிடம் அதிகம் செல்வாக்கு பெற்றவர் என்ற அடிப்படையிலும் முதல் மரியாதை எடப்பாடி பழனிசாமிக்கே கிடைத்து வருகிறது.
இந்தச் சூழலில்தான் எடப்பாடி பழனிசாமியின் 64-வது பிறந்த தினம் இன்று (மே 12) கடந்து போகிறது. சேலம், ஏற்காட்டில் மலர் கண்காட்சி தொடக்க விழாவில் இன்று எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தனது பிறந்த நாளையொட்டி விசேஷ கொண்டாட்டம் எதையும் அவர் நடத்தவில்லை.
ஆனாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் செல்போனில் வாழ்த்து கூறி வருகின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போனில் வாழ்த்து கூறினார். செவிலியர் தின நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், ‘செவிலியர்களுக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்கும் அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாள் பரிசாக அறிவிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ! #HBDCM pic.twitter.com/lFM8ueE7Fx
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) 12 May 2018
பிறந்த நாளை கொண்டாடாமல் எளிமை காட்டிய முதல் அமைச்சர் என்கிற பெயர், எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.