/indian-express-tamil/media/media_files/2025/07/19/whatsapp-image-202-2025-07-19-11-35-54.jpeg)
Edappadi Palaniswami
"திமுக கூட்டணியில் இணைந்ததன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் அடிமை சாசனம் எழுதித் தந்துவிட்டன. அவர்கள் திமுகவிடம் பணம் வாங்கியதுமே அவர்களின் கதை முடிந்துவிட்டது," என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பொதுமக்களிடையே நேற்று பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில்தான் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்கள்.
அதிமுக ஆட்சியில் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவுகரம் நீட்டும் கட்சி அதிமுக. காவிரி பிரச்சினைக்கு சட்டப் போராட்டம் மூலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பெற்றுத் தந்தது அதிமுக.
கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இருப்பதால் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டன. கம்யூனிஸ்ட் கட்சியினர் எப்போது திமுகவிடம் பணம் வாங்கினார்களோ, அப்போதே அவர்களது கதை முடிந்துவிட்டது. தேர்தலில் சீட் குறைத்துவிடுவார்கள் என்பதால், திமுகவை கண்டித்து எந்தப் போராட்டத்தையும் அவர்கள் நடத்துவதில்லை.
திமுக ஆட்சியில் என்ன சாதனைகளை செய்தார்கள் என்று கூற முடியுமா? உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட அரசு தேவையா? ஸ்டாலின் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. இதனால் மக்கள் அவருக்கு ‘பை பை’ சொல்லப் போகிறார்கள் எனத் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.