Advertisment

வேலூர் சிறையில் இஸ்லாமிய கைதிகள் வழிபட அனுமதி மறுப்பு: இ.பி.எஸ் கடும் கண்டனம்

வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் வழிபட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami

'தி.மு.க ஆட்சியாளர்கள், சிறைவாசிகள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்' என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Aiadmk | edappadi-k-palaniswami: வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் வழிபட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'கொரோனா பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்ட மசூதிகளை மட்டும் திறக்காமல் மூடி வைத்துள்ளனர். சிறைச்சாலைகளில் மசூதிகளை திறக்க வழிவகை செய்ய வேண்டும்' என அவர் வலியுறுத்தியுள்ளார். 

Advertisment

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:- 

சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும்.

கடந்த 29 மாத தி.மு.க ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக நாளிதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

எந்த மதத்தைச் சார்ந்த சிறைக் கைதியாக இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டு வந்தன. குறிப்பாக, வேலூர் மத்திய சிறைச் சாலையில் காலம் காலமாக இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகள், அவர்களுடைய மத நம்பிக்கையின்படி வழிபடுவதற்கு பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அ.தி.மு.க ஆட்சியிலும் இந்த நடைமுறை தொடர்ந்தது.

அந்தந்த மத குருமார்கள், பண்டிகை காலங்களில் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை செய்து நல் எண்ணங்களை வளர்க்கவும், கைதிகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், சிறைவாசிகளிடையே இந்த வைரஸ் தொற்று பரவக்கூடாது என்பதால், சிறைச் சாலைகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்த தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தபின்பு, கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகும் ஏதோ ஒரு காரணத்தால் சிறைகளில் மத வழிபாடுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக வேலூர்(தொரப்பாடி) மத்திய சிறைச்சாலைக்குள் மூன்று வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. 

அதில் இரண்டு மத வழிபாட்டுத் தலங்களை தற்போது வழிபாட்டுக்கு அனுமதித்துவிட்ட சிறை நிர்வாகம், இஸ்லாமிய சிறைவாசிகள் தொழுகை நடத்தும் மசூதியை மட்டும் மூடி வைத்துள்ளது. இதனால் வேலூர் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பத்திரிகைகளில்  செய்திகள் வந்துள்ளன. 

தி.மு.க ஆட்சியாளர்கள், சிறைவாசிகள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். எனவே, தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்."

 இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment