கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க.வில் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் பழனிசாமி திட்டவட்டமாக கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் நான்காண்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, டாஸ்மாக் ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொள்கை வேறு கூட்டணி என்பது வேறு. தேர்தல் சமயத்தில் யாருடன் கூட்டணி என்பது அறிவிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை நிறுத்துவதுதான் தி.மு.க.-வின் சாதனை ஆகும். தே.மு.தி.க-வுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்குவது பற்றி அப்போது பார்ப்போம் என்றார்.
அ.தி.மு.க.-வின் நிலைபாடு - எடப்பாடி பழனிசாமி
சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை சேர்க்க பா.ஜ.க. அழுத்தம் கொடுக்கிறதா? என்ற கேள்விக்கு “நீங்களாக கற்பனை செய்து கொண்டு செய்தி வந்துகொண்டு இருக்கிறது. 100 சதவீதம் அப்படி அல்ல; அ.தி.மு.க-வை பொறுத்தவரை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சசிகலா, ஓ.பி.எஸ்.-ஐ மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை. எதிர்காலத்திலும் அப்படி கிடையாது” என்றார்.
2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக தற்போது இருந்தே கூட்டணி யாருடன் வைப்பது என்பது குறித்த ஆலோசனைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதன்விளைவாக கூட்டணி கணக்கு முற்றிலும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.