நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறையில் பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேசிய கட்சிகளுடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது” என அதிரடியாக அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலை பாஜக உடன் இணைந்து அதிமுக சந்தித்தது.
இந்தத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக பாஜக கூட்டணி தோல்வியை தழுவியது. இதன் பின்னர் சலசலப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து இந்தக் கூட்டணி பிரிந்தது. தற்போது அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் பிரிந்து சென்று விட்டார். எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளர் ஆக உள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் மீண்டும் இணையலாம்” எனக் கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை, “உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவை குறிப்பிட்டு சொல்லவில்லை; கூட்டணிக்கான கதவுகள் திறந்துள்ளன” எனக் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, “தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை” என அதிரடியாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“