edappadi-k-palaniswami | dmk-vs-aiadmk | mk-stalin | திருச்சி தஞ்சை சாலையில் வல்லம் பிரிவு ரோடு அருகே 65 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், “தஞ்சாவூரில் இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது எதிரிகள் நமக்கு எதிரே இல்லை என்பதை காட்டுகிறது.
எவ்வளவோ துரோகம் செய்து அதிமுகவை அழிக்க பார்த்தார்கள், முடக்க பார்த்தார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலிதா ஆசியுடன் அத்தனையும் ஒழித்து கட்டப்பட்டு விட்டன.
நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பை பெற்றோம், தேர்தல் ஆணையத்தின் மூலம் நல்ல தீர்வை கண்டோம். இனி அதிமுகவை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவில் யார் உழைக்கிறார்களோ அவர்கள் உச்சபட்ச நிலையை அடைய முடியும். கிளை செயலாளராக இருந்த நான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.
எதிர்காலத்தில் நீங்களும் வரலாம் இது அதிமுகவில் மட்டும்தான் முடியும். அதிமுகவில் உழைப்புக்கு மரியாதை உண்டு, விசுவாசத்திற்கு மரியாதை உண்டு.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்த திமுக இரண்டு ஆண்டுகள், எட்டு மாத கால ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியில் ஒரு சிலவற்றை நிறைவேற்றி கொடுத்து விட்டு, இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் நூறு சதவிகிதம் நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்லி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். விங்ஞான உலகத்தில் யாரையும் ஏமாற்ற முடியாது.
திமுக குடும்ப கட்சி, ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் அவர்களுடைய குறிக்கோள். வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம் கிடையாது.
குடும்ப உறுப்பினர்கள் பதவிக்கு வர வேண்டும் என கணக்கு போட்டு செயல்படும் கட்சியான திமுக கார்ப்பரேட் கம்பெனி. அதனால்தான் லாப நஷ்ட கணக்குகளுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு எவ்வளவு ஊழல் செய்யலாம் என்பதே நோக்கம்.
இரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் கொள்ளை அடிப்பது ஒன்றுதான் குறிக்கோளாக இருந்துள்ளது. கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார்.
தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. அப்படியிருந்தால் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கலாம். ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளுக்கு, கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே சென்றுள்ளார். முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை.
திமுக ஆட்சியில் விவசாயம் செய்வதற்கு தண்ணீரை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்த மூன்றரை லட்சம் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களுக்கு பயிர்காப்பீடு திட்டத்தில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது சம்பா, தாளடி பயிர்களுக்கு தண்ணீர் இல்லை. கர்நாடக அரசிடமிருந்து தண்ணீரை பெற்றுத்தரவில்லை. அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
பார்த்து பார்த்து மக்களுக்கு நன்மை செய்யப்பட்டது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து திமுக அரசிற்கு பாடம் புகட்ட வேண்டும்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும். இந்த தேர்தல் 2026 தேர்தலுக்கு அடித்தளம் அமைக்கின்ற தேர்தல்" என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், அரசு முன்னாள் கொறடா மனோகர், சிவபதி உடன் இருந்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.