முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கடந்த சில நாள்களாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியல் என பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதேபோல அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை பேசியதை தொடர்ந்து அதிமுக-பாஜக என இரு கட்சிகளுக்கிடையே காரசார பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி கட்சி குறித்து விவாதிக்கவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து வேறுபாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசுவதற்கு,எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி டெல்லி செல்வதாக கூறப்படுகிறது.
இதனிடையே டெல்லி செல்ல கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க செல்வதால் இவர் புகழ்பெற்ற சேலத்து மல்கோவா மாம்பழத்தை எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“