Edappadi K Palaniswami | Dmk | Aiadmk: இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்கள் அளிக்கும் பங்களிப்பை கெளரவப்படுத்தும் விதமாக ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவம், சம உரிமை, சம ஊதியம், சம வாய்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவச்சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 76 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இ.பி.எஸ் கடும் விமர்சனம்
இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும், தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அ.தி.மு.க பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், " தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ள நிலையில் டி.ஜி.பி.கையில் விருது பெறுகிறார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க. நிர்வாகி தொடர்பில் உள்ளார். செய்தி வெளிவந்த பிறகே ஜாபர் சாதிக் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும். போலீஸ் அதிகாரியுடன் தொடர்பு வைத்துக் கொண்டு போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். போதைப் பொருளை விற்போர் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. முக்கியமான பிரச்சனைகளில் முதல்வர் பதிலளிக்காமல், ஆர்.எஸ் பாரதி மூலம் பதிலளித்துள்ளார்.
கூட்டணி என்பது அந்தந்த தேர்தல் காலத்திற்கு ஏற்ப அமையும். எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிவு என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு; அதுவே தொண்டர்களின் உணர்வு. " என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“