தமிழ்நாடு சட்டசபை அடுத்த ஆண்டு 2026 தேர்தல் நடைபெற உள்ள நிலையில் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை கோவையில் இன்று துவக்கி உள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டசபைத் தொகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கியவர், முதல்கட்ட சுற்றுபுற பயணத்தை 21-ம் தேதி நிறைவு செய்கிறார்.
இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தவர், தேக்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து தற்போது மேட்டுப்பாளையத்தில் நடந்த ரோடு ஷோவில் கலந்துகொண்டு மக்களை சந்தித்து மக்களுடன் உரையாடினார்.
கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட நரசிம்பநாயக்கன் பாளையம், துடியலூர் ரவுண்டனா, கோவை சக்தி சாலை சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இரவு 10 மணிக்கு கோவையை வந்தடைகிறார். மக்கள் சந்திப்பு பகுதிகளில், பிரசார வேன்களில் சென்றபடியே மக்களை சந்திக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் சென்று கொண்டு உள்ள அவருக்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கியும் கடந்த 4 ஆண்டு காலம் தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற தீமைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் வாகனத்தில் இருந்து சாலையில் இறங்கி மக்களை மக்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக அவரை வரவேற்கும் விதமாக கூட்டணி கட்சியான பா.ஜ.க மத்திய இணை அமைச்சர், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பொதுச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.