புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க அலுவலகத்தை நேரில் பார்வையிடுவதற்காக டெல்லிக்கு வருகை தந்துள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழக சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணம் கூட்டணி தொடர்பானதாக இருக்கலாமோ என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டெல்லியில் புதிய அ.தி.மு.க. கட்சி அலுவலகம் திறப்பு விழாவை ஒட்டி செல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், அங்கு பா.ஜ.க. சார்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. 2-ம் கட்ட தலைவர்களுடன் செல்லாமல் எடப்பாடி பழனிசாமி மட்டும் சென்றிருப்பது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்தும் பேசப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பா.ஜ.க. உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சட்டமன்ற பரபரப்புக்கு இடையேயும் மேற்கொண்டுள்ள இந்த பயணம் தமிழக அரசியலில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த சூழலில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "நான் எதற்காக டெல்லி வந்திருக்கிறேன் என்று தெரியாமல் கேள்வி எழுப்புகின்றனர். முக்கிய நபர் யாரையும் சந்திப்பதற்காக நான் டெல்லிக்கு வரவில்லை.
முன்னதாக அ.தி.மு.க கட்சி அலுவலகம் இங்கு திறக்கப்பட்டது. அதனை பார்வையிடுவதற்காக இங்கு வந்திருக்கிறோம்" என விளக்கம் அளித்துள்ளார்.