எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வினருடன் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்று தி.மு.க ஆட்சி மீது ஆளுநரிடம் புகார் அளித்த பின், கள்ளச் சாராயம் குடித்து 23 பேர் இறந்தும் சரியான நடவடிக்கை இல்லை என்று குற்றம் சாட்டினார்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கள்ளச் சாராய மரணங்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து, அ.தி.மு.க சார்பில் பேரணியாக சென்று ஆளுநரிடம் தி.மு.க மீது புகார் அளிக்கப்படும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச் சாராய மரணங்கள், போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிப்பதற்கு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.
அதன்படி, சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகே பேரணியில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை காலை ஆயிரக் கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் குவிந்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க-வினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். அ.தி.மு.க பேரணியால், சென்னை அண்ணாசாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
பேரணி ஆளுநர் மாளிகையை அடைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்த பிறகு, வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்து விட்டது. ரவுடிகள், திருடர்கள் பயமின்றி வீதிகளில் உலா வருகின்றனர். வயதானவர்களை குறி வைத்து கொலை கொள்ளை நடைபெறுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கள்ளச் சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்த பிறகும், தி.மு.க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் ஆறாக பெருக்கெடுத்துள்ளது. 23 பேர் உயிரிழந்த பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுகின்றனர். எங்கும் எதிலும் ஊழல் மலிந்துள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. போலி மதுபானத்தில் இரண்டு பேர் இறந்ததை மறைக்க தவறான தகவல் தருகின்றனர். தாங்கள் அளித்துள்ள புகார் மனுவை பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”