Edappadi-k-palaniswami | aiadmk | bjp: நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை தொடர்வதில் பனிப்போர் நிலவி வந்தது. முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் ஜெயலலிதாவை விமர்சித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு
இந்த பரபரப்பான சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் 25ம் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. விரிவான விவாதத்திற்குப் பிறகு அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜ.க, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணியில் இணையும் என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது தேர்தலுக்கு பிறகோ பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்த்தன. இதனிடையே, பா.ஜ.க நிர்வாகிகள் அ.தி.மு.க தலைவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
கூடுதலாக, கோவை வந்த பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும், தென்னை விவசாயத்தைப் பற்றி மட்டுமே வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். கூட்டணி முறிவு நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அது குறித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார்" என்று கூறினார்.
இ.பி.எஸ் விளக்கம்
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'பா.ஜ.க-வுடன் கூட்டணி முறிவு என்பது ஏற்கனவே அறிவித்தது தான். அ.தி.மு.க நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. பா.ஜ.க உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எந்த மாற்றமும் இல்லை.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது தொகுதி நலனுக்காகவே. தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். தமிழ்நாடு பாஜக தலைவரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட, எந்த கோரிக்கையையும் அதிமுக வைக்கவில்லை. கூட்டணி தொடர வேண்டும் என அவரவர்களின் விருப்பத்தை கூறுவது பற்றி அவரிடமே கேட்க வேண்டும். பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லையென எடுக்கப்பட்ட முடிவில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது" என்று தெரிவித்தார்.
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'எந்தெந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க தோல்வியடைந்தது. வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க அமைக்கும் கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். என்றும் கூறினார்.
அதோடு, மக்களவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பதையும் பட்டியல் போட்டார். இதுகுறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது பின்வருமாறு:-
கடந்த 2012 சட்டமன்ற தொகுதியில் நாங்கள் 7 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றோம். சேலத்தில் மட்டும் 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இப்படியாக பல இடங்களில் அமோக வெற்றி பெற்றுளாம்.
3 தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் எங்களது வேட்பாளர்கள் தோல்வியுற்றனர். சிதம்பரத்தில் 324 வாக்குகள் தான் குறைவு. ஈரோட்டில் 7 ஆயிரத்து 800 ஓட்டுகள் தான் குறைவு. நாமக்கல்லில் 15 ஆயிரத்து 400 வாக்குகள் தான் குறைவு. எனவே இந்த 10 தொகுதிகளில் அ.தி.மு.க எளிதில் வெற்றி பெற்று விடும்.
மீதி 10 தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் 20 ஆயிரம் வாக்குகள், வேலூரில் 27 ஆயிரம் வாக்குகள், காஞ்சிபுரத்தில் 42 ஆயிரம், கடலூரில் 50 ஆயிரம் வாக்குகள் தான் குறைவு. இப்படி 50 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாக கிட்டத்தட்ட 1ஓ தொகுதிகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கு கீழே 7 தொகுதிகள் உள்ளன. எனவே, உறுதியாக 100 சதவீதம் அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.