Advertisment

எதிர்க் கட்சித் தலைவர் பதவி: இ.பி.எஸ்-க்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami quo warranto 2021 election Tamil News

தகுதில்லாதவர் பதவி வகிப்பதை எதிர்த்து தான் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

Edappadi-k-palaniswami | chennai-high-court: கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனுவில் சொத்து, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் என்பவர், கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்துள்ளார். 

Advertisment

அந்த மனுவில், வேட்புமனுவில் சொத்துக்களையும், கல்வித் தகுதியையும் மறைத்த செயல் தவறான நடத்தை மட்டுமல்லாமல், ஊழல் நடவடிக்கையும் கூட என்றும் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததுடன், எம்.எல்.ஏ.வாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்றும், சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடுவதுடன், அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததால் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் வேட்புமனுவில் தகவல்களை மறைத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவிப்பது தகுதியிழப்பு ஆகாது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருந்தால் தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் எனவும், தகுதில்லாதவர் பதவி வகிப்பதை எதிர்த்து தான் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தால் கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்யலாம் என்பது தொடர்பான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai High Court Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment