/tamil-ie/media/media_files/uploads/2022/06/online-rummy-eps.jpg)
சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பவானி என்ற இளம் பெண் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு 20 சவரன் நகையை அடகு வைத்தும் சகோதரிகளிடம் இருந்து ரூ. லட்சம் வாங்கி பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான பவானி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால், மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என குரல் எழுந்துள்ளது.
இதையடுத்து, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட பவானியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், திமுக அரசு ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யத் தயக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: “பிரதமர் சென்னை வந்த போது நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் நூல் விலையை குறைக்கக்கோரி கோரிக்கை வைக்கவில்லை. வருமானம் வரக்கூடியவைகளுக்கு மட்டுமே அவர் கோரிக்கை வைப்பார்.
பொன்னையன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதிமுக-பாஜக உறவு நல்ல முறையில் உள்ளது. அதிமுக - பாஜக இடையே எந்த உறுத்தலும் இல்ல.
திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களை மறைக்கவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் போடுகிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. சேலம், ஓமலூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடு சேர்ந்து வருவது 'நில அபகரிப்பு. எங்கையாவது ஏமாந்தவர்கள் இருந்தால், அந்த நிலத்தை அபகரித்துவிடுவார்கள். எல்லா துறைகளிலும் ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு உள்ளது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து கொள்ளை புறம் வழியாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாலும் 'செவிடன் காதில் ஊதிய சங்கு' போலதான் இந்த அரசு செயல்படுகிறது. நூல் விலை உயர்வால் 30 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.” என்று கூறினார்.
சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 6, 2022
காவல்துறை டிஜிபி-யே
ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி,
உங்கள் உயிரைக் கொல்லலாம்,1/2 pic.twitter.com/5TM8fdKCOu
மேலும் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது.
காவல்துறை டிஜிபி-யே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம் என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்?” என்று சந்தேகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.