Advertisment

எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ. ராசா; கொதித்தெழுந்த இ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன் கடும் கண்டனம்

எம்.ஜி.ஆர்-ஐ விமர்சித்த தி.மு.க எம்.பி ஆ. ராசாவின் பேச்சுக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அ.ம.மு.க பொதுச் செயலாலர் டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
A Raja EPS

எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ. ராசா; கொதித்தெழுந்த இ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன் கடும் கண்டனம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எம்.ஜி.ஆர்-ஐ விமர்சித்த தி.மு.க எம்.பி ஆ. ராசாவின் பேச்சுக்கு அ.தி.மு.க  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அ.ம.மு.க பொதுச் செயலாலர் டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தி.மு.க எம்.பி-யும் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆ. ராசா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ஐ விமர்சித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆ. ராசாவின் பேச்சு அ.தி.மு.க தலைவர்கள், தொண்டர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆ. ராசாவின் பேச்சுக்கு அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டத்தில், தி.மு.க எம்.பி ஆ. ராசா, அ.தி.மு.க-வை நிறுவிய எம்.ஜி.ஆர்-ஐ கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர்-ஐ தரக்குறைவாக விமர்சித்த ஆ. ராசாவின் பேச்சுக்கு அ.தி.மு.க  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அ.ம.மு.க பொதுச் செயலாலர் டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஆ. ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் , என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதய தெய்வமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற 

மாண்புமிகு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை, அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், தரம் தாழ்ந்த தி.மு.க அளவிற்கு அ.தி.மு.க என்றும் தரம் தாழாது .

இந்த விடியா தி.மு.க ஆட்சியில், எனது தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி அவர்களின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் , கழகத்தின்  இதயதெய்வங்களான புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்கு இணையாக  கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆண்டிமுத்து ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன். 

வரலாறு நெடுக எங்கள் இதயதெய்வங்களை பிம்பச்சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளன. அதே போல, இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் இதயதெய்வங்களின் புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிமுத்து ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

 “கல்லை வடித்தால் அது வெறும் சிலை- அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம்” என்று பதிவிட்டுள்ளார். 

எம்.ஜி.ஆர்-ஐ விமர்சித்துப் பேசிய ஆ. ராசாவுக்கு ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளர்.

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள் தான் திமுகவினர். அதிலும், குறிப்பாக ஆ.ராசா போன்றவர் எம்.ஜி.ஆரை பற்றி இழிவாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசாவுக்கு 2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் என்னசெய்வதென்று தெரியாமல் "பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற மனநிலையில் கண்டதையும் பேசி வருகிறார்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக எம்.ஜி.ஆரை இகழ்ந்து ஆ.ராசா பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது. எம்.ஜி.ஆரை பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. அது தமிழக மக்களுக்கே நன்றாக தெரியும்.

எம்.ஜி.ஆர் அவர்கள் யார்? என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் நன்றாக புரிந்து வைத்து இருந்தார். அதனால் தான் எனது தம்பியாம் இதயக்கனி என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்போடு கூப்பிட்டார். வேறு யாரையும் இது போன்று அழைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், தி.மு.க.வினரை 13 ஆண்டுகாலம் எதிர்கட்சியாகவே அமரவைத்த எம்.ஜி.ஆர் அவர்கள் எப்படிப்பட்டவர் எனபது மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். இவர்களை காட்டிலும் தமிழத்தில் பட்டி தொட்டியில் உள்ள அனைவருக்கும் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகள் பற்றி நன்றாகவே தெரியும்.

எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினாலும், தமிழக மக்களின் மீது கொண்ட அளவுகடந்த அன்பினாலும் எண்ணற்ற நலத்திட்டங்களை வகுத்து கொடுத்த மாமனிதர். எம்.ஜி.ஆர் தந்தை பெரியாரின் நூற்றாண்டைத் தமிழகம் எங்கும் கொண்டாடினார். அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தித் தமிழ்மொழியை நவீனப்படுத்திய நாடோடி மன்னன் என்பதை இந்த நாடே அறியும்.

தமிழுக்கென்று தஞ்சையில் பல்கலைக்கழகம் அமைத்து கொடுத்த அன்புத்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்புடன் நடத்தி உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்தவர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் அரசாணைகளைத் தமிழில் வெளியிடவும், தமிழில் கையெழுத்திடவும் வைத்த செயல்வீரர் எம்.ஜி.ஆர் அவர்கள். "தமிழ்ப்பண்புக்கு நான் அடிமை" என்று உணர்த்துவதற்காக பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடிய தமிழகத்தின் தவப்புதல்வன் எம்.ஜி.ஆர்.

தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக்குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். மதுரை பல்கலைக்கழகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் எம்.ஜி.ஆர்தான். எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்களின் மனங்களில் இன்றைக்கும் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவராக இருக்கிறார்.

அப்படிப்பட்ட மறைந்த தலைவரை பற்றி இழிவாக பேசுவதை வேடிக்கை பார்க்கும் தி.மு.க. தலைமைக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா? என்ற பழமொழிக்கேற்ப ஆ.ராசா போன்ற வாய்ச்சவடால் வீரர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

ஆ. ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் அவர்களை பற்றிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. திமுகவை தீயசக்தி எனக்கூறி தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிப் பொறுப்பிற்கு வரவிடாமல் அடியோடு சாய்த்த புரட்சித் தலைவர் அவர்கள் மறைந்த பின்பும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதையே ஆ.ராசா அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சு வெளிப்படுத்துகிறது.

தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்து பொதுவாழ்வில் நேர்மையின் அடையாளமாக திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றியும், இதய தெய்வம் அம்மா அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ய விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற திமுகவினருக்கு என்ன தகுதியிருக்கிறது? ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இன்று சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரை நூற்றாண்டுக்கும் முன்பாகவே அரசியலில் கடைக்கோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் என்பதை தி.மு.க-வினர் மறந்துவிடக்கூடாது.

புரட்சித் தலைவர் அவர்களின் நேர்மையான வாழ்க்கைக்கு, வாழ்நாள் முழுவதும் அவருக்காக கூடிய கூட்டமே சாட்சியாக இருக்கும் போது, அரசியல் காரணத்திற்காக இழிவுப்படுத்தும் நோக்கிலான பேச்சுக்கள், புரட்சித் தலைவர் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் எந்தவகையிலும் களங்கத்தை ஏற்படுத்தாது என்பதை திமுகவினர் உணர வேண்டும். மறைந்த தலைவர்கள் மீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்து வரும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா அவர்கள் இனியாவது தனது தகுதியை அறிந்து பேச வேண்டும். இல்லையெனில் அதற்கான பாடத்தை வரும் தேர்தல்களில் மக்கள் புகட்டுவார்கள் என்பதை எச்சரிக்கையாக விடுக்கிறேன்” என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

A Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment