கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 59 பேர் உயிரிழந்த நிலையில், தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “இந்த விடியா தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு தான் தமிழக முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம், போதை பொருள் விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விடியா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் தலைமைச் செயலகத்தில் கூட்டம் போடுகிறார், அந்த கூட்டத்திலே உயர் அதிகாரிகள், உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள், அந்த செய்தி ஊடகத்தின் வாயிலாக, பத்திரிகைகளின் வாயிலாக வெளிவருகிறது. இனி தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் விற்பனை அடியோடு ஒழிக்கப்படும், கள்ளச்சாராயம் அடியோடு ஒழிக்கப்படும் என்ற செய்தியை மட்டும் நாம் காண்கின்றோம். ஆனால், ஒழித்தாரா என்று சொன்னால் இல்லை. போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, கள்ளச்சாராய விற்பனை தடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத முதலமைச்சர் தான் விடியா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இந்த பகுதியை பொறுத்த வரைக்கும் மாதவஞ்சேரி, சேஷ சமுத்திரம், கருணாபுரம் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் காவல் நிலையத்திற்கு அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை அலுவலர் இருக்கின்ற இந்த பகுதியிலே தங்கு தடை இன்றி கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்று சொன்னால் இந்த ஆட்சி எப்படி இருக்கிறது என்று நாம் எண்ணிப் பார்க்கிறோம்.
இன்றைக்கு இந்த ஆட்சியை தனியார்கள் ஆட்டிப் படைக்கிறார்கள், தனியார்களை வைத்துக்கொண்டு தி.மு.க-வைச் சேர்ந்த இந்த பகுதியிலே இருக்கின்ற முக்கிய புள்ளிகள் துணையோடு தான் இந்த கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றதாக கள்ளச்சாராயம் பிடித்து இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும்போது மக்கள் என்னிடத்திலே கூறினார்கள். கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்று சொன்னால், ஆளுங்கட்சி உடைய ஆதரவு இல்லாமல் இந்த கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறாது.
இன்றைக்கு காவல் நிலையத்திற்கு அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்று சொன்னால் இந்த ஆட்சியினுடைய அவலங்களை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த ஆட்சியாளர்களின் அடாவடித்தனம், ஏழை எளிய ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர்களை துச்சம் என மதிக்கின்ற அரசாங்கம் இந்த அரசாங்கம். இவர்களின் அலட்சியத்தின் காரணமாக செயலற்ற தன்மையின் காரணமாக நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆள்வதன் காரணமாக கள்ளக்குறிச்சி நகரத்திலே கள்ளச்சாராயம் குடித்து சுமார் 58 பேர் மரணம் அடைந்ததாக அரசு சொல்லுகிறது. ஆனால், ஊடகத்திலும் பத்திரிகையிலும் செய்தியிலும் 60 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்ற செய்தி கிடைக்கிறது. கிட்டத்தட்ட 157 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இன்று வரை அரசாங்கத்தின் அறிவிப்பு படி 58 பேர் இறந்திருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த 58 பேரின் இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் லட்சியமாக இருந்த காரத்தினால் தான் இந்த 58 பேரின் உயிர் பறிபோனது. இந்த 58 குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து நிற்பதற்கு காரணம் இந்த இந்த விடியா தி.மு.க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான்.
நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள் இப்போதுகூட கீழே இருந்து சொல்கிறார்கள். இப்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 59 ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். நான் இங்கே அரசாங்க அறிவிப்புபடி பேசிக் கொண்டிருக்கிறேன்.
விடியா தி.மு.க முதலமைச்சர் அடக்கு முறையை கையாளுகிறார். பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக அ.தி.மு.க சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இன்றைக்கு இடையூறு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கு இரவு மேடை போடப்பட்டது, அவசர அவசரமாக இந்த மேடையை அகற்றினார்கள். இப்போது தற்காலிக மேடை அமைத்து இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு வருகின்றவர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தை முடக்கப் பார்க்கின்றார்கள்.
ஸ்டாலின் அவர்களே காற்றை எப்படி தடை செய்ய முடியாதோ, அதுபோல மக்களின் குரல்களையும் நீங்கள் தடை செய்ய முடியாது. மக்களின் கொந்தளிப்பை நீங்கள் தடை செய்ய முடியாது. இதற்கெல்லாம் பதில் சொல்கின்ற காலம் வெகு விரைவில் வரும் என்பதை எச்சரிக்கின்றேன்.
இங்கு யாருக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம் என்றால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கின்றோம். இந்த ஆர்ப்பாட்டம் எதற்காக நடைபெறுகின்றது, தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை தட்டி எழுப்பி இனிமேல் கும்பகர்ணன் போல் தூங்காதே விழிப்பாய் இரு என்று சொல்வதற்காக நடைபெறுகிறது.
59 அப்பாவி மக்களின் உயிர் பறிபோய் இருக்கிறதே குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்களின் உயிர் பறிபோயிருக்கிறது. ஏழை மக்களுடைய உயிர் பறிபோயிருக்கிறது. நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்க வேண்டும் என்று சொன்னால், இங்கே இருக்கின்ற காவல்துறையை வைத்தோ அல்லது அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் மூலமாகவோ நிதி கிடைக்காது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் புள்ளிகள், பத்திரிகையிலும் ஊடகத்திலும், பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் குறிப்பிடுகிறார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிகாரமிக்கவர்கள் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றால் சிபிஐ நீதி விசாரணை வேண்டும். சி.பி.ஐ மூலமாக விசாரிக்க வேண்டும். அப்போதுதான், நீதி நிலைநாட்டப்படும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினால் நாங்கள் கூறியதைப் போல, சி.பி.ஐ விசாரணைக்கு இந்த அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாங்களும் நீதிமன்றம் சென்று இருக்கிறோம். நீதியரசர் தெளிவாக பல்வேறு கேள்விகளை இந்த அரசுக்கு வைத்தார்கள்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.