சில ரகசியங்களை வெளியிட்டால், எடப்பாடி பழனிசாமி சிறை செல்ல நேரிடும் என ஓ.பி.எஸ் தெரிவித்திருந்த நிலையில், ஜெயலலிதாவிற்கு ரூ. கோடி கடன் கொடுத்ததாக ஓ.பி.எஸ் கூறியது மோசமான வார்த்தை என்றும் அவர் விரைவில் சிறைக்கு செல்வார் என்றும் இ.பி.எஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப் போராட்டம் நடத்தி அ.தி.மு.க பொதுச் செயலாளாராகி கட்சியைக் கைப்பற்றி உறுதியாக நிற்கிறார். அதே நேரத்தில், அவரது போட்டியாளரான ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாக்கியுள்ளார்.
இந்த சூழலில்தான், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை (26.12.2023) நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், “இந்த இயக்கத்தை அழிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால், அம்மா இந்த இயக்கத்தை வலுவாக மாற்றினார். கட்சியின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்தவன் நான். எங்களை கழகத்தில் இருந்து வன்முறையாக வெளியேற்றி விட்டனர். அந்தம்மா (சசிகலா) உங்களுக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்தார். அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசினீர்கள்.
11 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் இருந்த நான், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்திருந்தால், ஆட்சி போயிருக்கும். நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது. தவறான வழியில் சென்றபோது எச்சரித்தேன். ஆனால், அதிகார போதை, பணத்திமிறில் இருந்தார். அதனால், ஆட்சி போனது. அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோற்று போனது.
நாங்கள் தொண்டர்களுக்காக வாதாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர். அங்கு குண்டர்கள்தான் இருக்கின்றனர். தனிக்கட்சி தொடங்கும் நோக்கமில்லை். கோரப்பிடியிலிருந்து அ.தி.மு.க-வைக் கைப்பற்றி, மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாவிடம் ஒப்படைப்பது நன்றியாக இருக்கும். நிதி சுமையால் ஜெயலலிதா ரூ.2 கோடி கட்சிப் பணத்தைக் கேட்டார். ஒரே மாதத்ததில் அதை அவர் திருப்பிக் கொடுத்தார். இதுதான் வரலாறு, இன்றைக்கு 228 பேரை வைத்து கட்சியை அபகரிக்க நினைக்கிறார்கள்.
எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி கொடுத்தார்கள். நான் திருப்பிக் கொடுத்து விட்டேன். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது. நாங்கள் செய்த குற்றம் என்ன... இன்னமும் கட்சித் தொண்டர்களின் உரிமைக்காகப் பாடுபடுகிறேன். ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த நான் ரகசியங்களை அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக இருக்கிறேன்.” என்று ஓ. பன்னீர் செல்வம் காட்டமாகப் பேசினார்.
ஓ. பன்னீசெல்வத்தின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க-வில் இருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது. மேலும், ஜெயலலிதாவிற்கு ரூ. கோடி கடன் கொடுத்ததாக ஓ.பி.எஸ் கூறியது மோசமான வார்த்தை என்றும் அவர் விரைவில் சிறைக்கு செல்வார் என்றும் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
“நான் ரகசியங்களை அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் ஜெயலலிதா நிதிசுமையில் இருந்தபோது, ரூ. 2 கோடி கட்சிப் பணத்தைக் கேட்டார், ஒரே மாதத்தில் திருப்பிக் கொடுத்தார்” என்றும் ஓ.பி.எஸ் கூறியது குறித்து, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக பதிலடி கொடுத்து பேட்டி அளித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை (27.12.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தென் மாவட்டங்களில் கடந்த 17-ம் தேதி அதிகனமழை பெய்யும் என கடந்த 14-ம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அங்கும் தி.மு.க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம்.
தமிழக முதல்வர், மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டிருக்கிறார். மத்திய அரசு நிதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் மாநில அரசின் நிதியில் இருந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை மீட்டெடுப்பதுதான் ஒரு நல்ல அரசின் கடமை. ஆனால், மாநில அரசானது, வேண்டுமென்றே மத்திய அரசு மீது குறைசொல்லிக் கொண்டும், மத்திய அரசானது, தமிழக அரசு மீது குறை சொல்லிக்கொண்டும் இருப்பது கவலை அளிக்கிறது. மத்திய அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. மத்திய அரசானது பேரிடர் காலங்களில் உடனடியாக தேவையான நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.
அந்தந்த அரசியல் சூழலுக்கு தகுந்தவாறு கட்சிகள் கூட்டணி அமைக்கும். அதுபோல, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருந்தோம். தற்போது வெளியேறிவிட்டோம். சிறுபான்மையினரின் வாக்குகளை ஏமாற்றி தி.மு.க பெற்று வந்தது. அதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். அதை தாங்க முடியாத காரணத்தால் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் அமையும் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.
திஹார் சிறைக்கு செல்ல ஓ. பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார். அவர் மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில், அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். ஓ.பி.எஸ் தன் குடும்பத்தினர் மீது நிறைய சொத்து வாங்கி வைத்துள்ளார். நான் முதல்வராக இருந்துள்ளேன். எனக்கு அனைத்துமே தெரியும். என் மீது பழியை சுமத்தி அவர் தப்பிக்க பார்க்கிறார். ஆனால், தப்பிக்க முடியாது. சட்டப்பேரவையில் முன்வரிசையில் இருக்கும் தி.மு.க அமைச்சர்கள் பலருக்கும் தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது.
நாங்களெல்லாம் கட்சியில் தொடக்கத்தில் இருந்தே இருக்கிறோம். ஓ.பி.எஸ் இடையில் வந்தவர். அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடன் அளித்ததாக சொல்கிறார். எவ்வளவு மோசமான வார்த்தை அது. ஓ.பி.எஸ் தரப்பினர் தி.மு.க-வின் பி டீம். ஓ.பி.எஸ் தன்னிடம் உள்ள ரகசியம் என்ன என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். மக்கள் தெரிந்துகொள்ளட்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.