அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எனும் எழுச்சிப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, சிவகங்கை அரண்மனை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
சிவகங்கை மண்ணை வீர வரலாற்று மிக்க மண் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, "அம்மா அரசு இந்த இடத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல நினைவு மண்டபங்கள் மற்றும் விழாக்கள் நடத்தியது. ஆனால் தற்போதைய திமுக அரசு 5 ஆண்டு ஆட்சியில் மக்கள் நல திட்டங்களை வகுப்பதற்குப் பதிலாக, குடும்ப ஆட்சியையே முன்னிலைப்படுத்தியுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி சாடினார். "பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்பில்லை. போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது சாதாரணமான ஒன்றாகி விட்டது. இவ்வாறு பொம்மை முதல்வர் ஆட்சி நடக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், சாதனைகளையும் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார். "67 கலை, அறிவியல் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள், 284 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா மெடிக்கல் மற்றும் மினி கிளினிக் திட்டம் ஆகியவை எங்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்டன. ஆனால் திமுக அரசு அவற்றை செயலிழக்க வைத்துள்ளது" என அவர் விமர்சித்தார்.
நிதி நிர்வாகத்தில் திமுக அரசின் செயல்பட்டையும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். "நாங்கள் 1500 ரூபாய் உதவித் தொகை வழங்கவுள்ளதாக அறிவித்தோம். அவர்கள் தில்லுமுல்லு பேசி ஆயிரம் ரூபாயை 28 மாதங்கள் கழித்து வழங்கினர். திமுக அரசு ₹4.38 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த கடனை எடுத்து திருப்பிச் செலுத்த இப்போது மக்கள் மீது ஏராளமான வரிகளை சுமத்தி வருகின்றனர்" என்றார்.
திமுகவின் நாடக அரசியல்: எடப்பாடி பழனிசாமி சாடல்
திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு நாடகம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். "சிகிச்சை செலவில் இருக்கிறாரா அல்லது அதிகாரிகளை அழைத்து ஷோ நடத்துகிறாரா என்பது தெரியவில்லை. 18 நாட்கள் வெளிநாட்டு பயணத்துக்குச் சென்றவர் இப்போது மக்கள் நலமே முக்கியம் என்றால் நம்ப முடியவில்லை. இந்த நாடகத்துக்கு சிவாஜி கணேசனும் இணையாக நடிக்க முடியாது. திமுக ஆட்சி – கலெக்ஷன், கமிஷன், கனெக்ஷன் தவிர வேறு எதிலும் சாதனை இல்லை, அவர் விமர்சித்தார்.
இந்த நிகழ்வின் போது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் உடன் இருந்தார்.