உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்த வழக்கில் தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டி, மாணவ செல்வங்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், “நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு விளையாடி வரும் இந்த நிர்வாக திறமையற்ற ஆட்சியாளர்கள் இன்னும் எத்தனை காலம்தான் தமிழக மக்களை ஏமாற்ற போகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம்; அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று தற்போதைய முதல் அமைச்சரும் அவருடைய மகனும் கூறினார்கள்.
இந்த 20 மாதங்களாக நீட் தேர்வை ஒழிக்க எந்தவொரு உருப்படியான முயற்சியும் எடுக்காமல் அரைத்த மாவையே சட்ட முன்வடிவு என்ற பெயரில் அரைத்துக் கொண்டிருக்கிறது இந்த விடியா அரசு.
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசால் தொடரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான வழக்கின் மறுசீராய்வு மனுவை தாமதப்படுத்தாமல் விரைந்து நடத்தி தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கி இருக்க முடியும்.
ஆனால் இந்த அரசு கடந்த ஒன்றரை மாதங்களாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அந்த வழக்கு தாமாகவே உச்ச நீதிமன்றத்தில் 2022 அக்டோபர் 14ஆம் தேதி பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் வழக்கை நடத்தாமல் விடியா அரசு வாய்தா கோரியது. தொடர்ந்து இந்த வழக்கை ஜனவரி மாதத்துக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று (அதாவது நேற்றுமுன்தினம் ஜன.3) விசாரணைக்கு வந்தபோது இந்த அரசு 6 மாதம் வாய்தா தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது.
ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த விடியா அரசின் கோரிக்கையை ஏற்காமல் கண்டனம் தெரிவித்து தலையில் கொட்டியுள்ளது. மேலும் வழக்கை மீண்டும் பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யம் சூட்சுமம் தங்களுக்கு மட்டும்தான் தெரியும் என பொய்யுரைத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக விடியா அரசு, தக்க வழக்குரைஞர்களை வைத்து வழக்கை நடத்தாமல் நாடகம் நடத்துவது கண்டனத்துக்குரியது.
மேலும் தங்களுடைய இயலாமையை ஒப்புக்கொண்டு மாணவ செல்வங்களிடமும், பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/