/indian-express-tamil/media/media_files/2025/02/03/2dgF53aawUhLdQ4wuhdO.jpg)
Edappadi Palanisamy
அ.தி.மு.க.வின் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
அவர் பேசுகையில்; ”மேகதாது அணை விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தவரை நீதிமன்றம் வரை சென்று நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இன்றைய அரசாங்கம் அதில் முழு கவனம் செலுத்தவில்லை. உண்மையிலே தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம்.
காவிரி ஆறு தமிழகத்தின் ஜீவ நதி. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் நம் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும். எனவே ஸ்டாலின் இதற்கு மேலும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையுடன், கர்நாடக அரசிடம் பேசி மேகதாது திட்டத்தை கைவிட கேட்டுக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள். அதேபோல கேரள அரசுடன் பேசி முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கும், அதன் நீர்மட்டத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் மூலமாக கிடைக்கக் கூடிய நன்மைகளை ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும்", என்று கூறினார்.
VIDEO | PTI Exclusive: AIADMK general secretary Edappadi K Palaniswami says, "Political parties may express their wish, but people of Tamil Nadu know that the real faceoff is between two big parties."
— Press Trust of India (@PTI_News) September 8, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)… pic.twitter.com/KEuFH0KM7E
சில கட்சிகள் 2026 தேர்தலில் தங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி எனச் சொல்லி வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பழனிச்சாமி, "தமிழ்நாட்டில் பெரிய கட்சிகள் என்று பார்த்தால், அதிமுகவும் திமுகவும் மட்டும்தான். 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும். அதிமுக சுமார் 31 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற பெயர் பெரும் அளவிற்கு திட்டங்களை கொண்டு வந்தது. திமுக அரசு மக்களுக்காக எந்த பெரிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மக்கள் விரோத ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் வன்கொடுமை, பல்வேறு விவசாயிகள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். திமுக அரசு மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது. 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி சுமார் 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக அரசு பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்", என்று பழனிச்சாமி அந்த பேட்டியில் உறுதிபட தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.