அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார். அ.தி.மு.க-வின் கருப்பு சிவப்பு வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி டி.டி.வி தினகரனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார்.
ஜெயலலிதா மறைவுகுப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரான நிலையில், அ.தி.மு.க-வில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பின், எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு முதலமைச்சரானார். பின்னர், டி.டி.வி தினகரனை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். பின்னர், 2018-ம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் தனிக் கட்சியைத் தொடங்கினார். டி.டி.வி தினகர்ன் அ.ம.மு.க-வுக்கு அ.தி.மு.க கொடியைப் போலவே கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களுடன் நடுவில் ஜெயலலிதா படத்தை பயன்படுத்தி இருந்தார்.
டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கட்சிக் கொடி அ.தி.மு.க கொடி போல உள்ளதால், அந்தக் கொடியைப் பயன்படுத்தத் தடை விதிக்கவும், ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும் தினகரனுக்கு எதிராக 2019-ம் ஆண்டு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்தனர். மேலும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி இருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், நீதிபதி தமிழரசி முன்பு இன்று (16.03.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்கிற முறையில் இந்த வழக்கை திரும்பப் பெறுகிறோம். நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என்று மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் அணி இருதரப்பும் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கின்றனர். இருவரும் கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார். அ.தி.மு.க-வின் கருப்பு சிவப்பு வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி டி.டி.வி தினகரனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.