கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என தனியார் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக உயர்கல்வித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு சென்னை லயோலா கல்லூரி கூட்ட அரங்கம் வாடகைக்கு விடப்பட்டதை எதிர்த்து பத்திரிகையாளர் சுஜிதா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், நீதிமன்றமே தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரிக்க பரிந்துரைத்தார்.
அதன்படி, மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றில் சலுகை பெறும் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகங்களை கல்வி சாராத பிற வணிக நோக்கிற்காக பயன்படுத்துவது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தங்கள் கல்லூரி வளாகத்தை வணிக நோக்கில் பயன்படுத்தவில்லை என்றும், இதுகுறித்து விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென லயோலா கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உயர்கல்வித்துறை தரப்பில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என அந்த கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என தனியார் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், லயோலா கல்லூரி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"