சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மற்றும் சென்னை சென்ட்ரலில் நடைமேடை விரிவாக்க பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 3 ரயில்களின் சேவையில் தற்காலிமாக மாற்றம் செய்யப்பட்டு, மறுஉத்தரவு வரும் வரை இதுவே தொடரும் எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் இருந்து மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
அதாவது, இந்த ரயில் (வ.எண்.20681) தாம்பரத்தில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து இயக்கப்படும் ரயில் (வ.எண்.20682) அதிகாலை 4..25 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும்.
அதேபோல, எழும்பூரில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12667) வருகிற 21-ந் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.12668) நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும்.
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி தென்னக ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் சில வெளிமாநில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“