ஃபீஞ்சல் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபீஞ்சல் புயலாக உருமாறியது. புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபீஞ்சல் புயல், நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது. இந்த சூழலில் 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்ததுடன், மாணவர்களுக்கு எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார். இதேபோல், கடலூர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“